மண்டியிட்டு பழக்கம் இல்லை,சிறைக்கு செல்ல தயார் மத்திய அரசுக்கு சரத்பவார் சவால்

மத்திய அரசிடம் தங்களுக்கு மண்டியிட்டு பழக்கம் இல்லை சிறைக்கு அனுப்பினாலும் பிரச்சினை இல்லை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறி உள்ளார்.
மண்டியிட்டு பழக்கம் இல்லை,சிறைக்கு செல்ல தயார் மத்திய அரசுக்கு சரத்பவார் சவால்
Published on

மும்பை

சர்க்கரை ஆலைகளுக்கு மராட்டிய கூட்டுறவு வங்கி, கடன் வழங்கியதில் 5 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. சரத்பவாரின் உறவினரான அஜித்பவார் உள்ளிட்டோர் 2005 முதல் 2010 ஆம் ஆண்டு வரை அந்த வங்கியின் இயக்குனர்களாக இருந்த காலகட்டத்தில், அவர்களுக்கு சாதகமாக கடன் ஒப்புதல் வழங்கி மோசடி நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது.

இது தொடர்பாக சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் சரத்பவார், அஜித்பவார் உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பான கேள்விக்கு மும்பையில் பதிலளித்த சரத்பவார், சிறைக்கு செல்வதில் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும், சிறையில் அடைக்க வேண்டும் என்று சிலர் முடிவு செய்தால் அதனை வரவேற்பதாகவும் கூறினார். இதற்கு முன் அந்த அனுபவம் இல்லை என்பதால் தான் மகிழ்ச்சியடைவேன் என்றும் சரத்பவார் கூறினார். வரும் 27 ஆம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு சென்று விளக்கம் அளிக்க இருப்பதாக குறிப்பிட்ட சரத்பவார், மத்திய அரசிடம் தங்களுக்கு மண்டியிட்டு பழக்கம் இல்லை என்று தெரிவித்தார்.

அக்டோபர் 21 ஆம் தேதி மராட்டியத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வழக்குப்பதிவு செய்து விசாரிப்பது ஏன் என்றும் சரத்பவார் கேள்வி எழுப்பினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com