

இந்திய விமானம் கடத்தல்
கடந்த 1999-ம் ஆண்டு டிசம்பர் 24-ந் தேதி, நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம், நடுவானில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டது. முதலில் லாகூருக்கு செல்லுமாறு கடத்தல்காரர்கள் கூறினர். ஆனால், அங்கு அனுமதி கிடைக்காததால், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் விமானம் தரை இறங்கியது.அனுமதி கிடைத்தநிலையில், லாகூருக்கு சென்றது. அங்கிருந்து துபாய்க்கு சென்றது. இறுதியாக, தலீபான் கட்டுப்பாட்டில் இருந்த ஆப்கானிஸ்தானில் உள்ள காந்தகார் விமான நிலையத்தில் தரை இறங்கியது.இந்திய ஜெயில்களில் இருந்த மசூத் அசார் உள்ளிட்ட 3 பயங்கரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்று கடத்தல்காரர்கள் நிபந்தனை விதித்தனர். 3 பேரும் ஒப்படைக்கப்பட்ட பிறகு, 31-ந் தேதி பயணிகளை விடுவித்தனர்.
ஒரே மாதிரி காட்சிகள்
கடத்தப்பட்ட அந்த விமானத்தின் கேப்டனாக இருந்தவர் தேவி சரண். 59 வயதான இவர், கடந்த ஆண்டு ஓய்வு பெற்று விட்டார்.
தற்போதைய ஆப்கானிஸ்தான் நிகழ்வுகள் குறித்து அவர் கூறியதாவது:-
தற்போது காபூல் விமான நிலையத்துக்கு உள்ளேயும், வளியேயும் கூட்டம், கூட்டமாக மக்கள் அலைமோதுகின்றனர். விமானத்தை பிடிக்க ஓடுகிறார்கள். இந்த புகைப்படங்களை பார்க்கும்போது, 1999-ம் ஆண்டு விமான கடத்தலின்போது காந்தகார் விமான நிலையத்தில் நடந்த பீதியூட்டும் நிகழ்வுகள் நினைவுக்கு வருகின்றன. இரண்டும் ஒரே மாதி இருக்கின்றன.ஒரே வித்தியாசம் என்னவென்றால், காந்தகார் விமான நிலையத்தில் அப்போது நாங்கள் மட்டும் இருந்தோம். இப்போது காபூலில் மக்களும் இருக்கிறார்கள். நாங்கள் தப்ப விரும்பியதைப்போல், அவர்களும் தப்ப விரும்புகிறார்கள்.
அச்சுறுத்தல்
அப்போதைய தலீபான்களில் 2 வகை இருந்தனர். ஒருவகை தலீபான்கள், தலைப்பாகை, சாதாரண உடை அணிந்து, ராக்கெட் லாஞ்சருடன் திரிவார்கள். அவர்கள் கலாசார காவலர்கள் போன்றவர்கள். அவர்கள்தான், கடத்தப்பட்ட விமானத்தை சூழ்ந்து கொண்டார்கள்.அவர்கள் எனக்கு நேரடியாக அச்சுறுத்தல் விடுக்கவில்லை. ஆனால், ராக்கெட் லாஞ்சருடன் விமானத்தை முற்றுகையிட்டதை பார்க்கும்போது அச்சுறுத்தலாக இருந்தது. கோரிக்கைகளை நிறைவேற்றாமல் விடமாட்டார்கள் என்று தோன்றியது.
இவ்வாறு அவர் கூறினார்.