“பழங்குடியினர் மறுவாழ்வுக்கு உடனடி நடவடிக்கை தேவை” - மத்திய மந்திரிக்கு ராகுல் காந்தி கடிதம்

வயநாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பழங்குடியினரின் மறுவாழ்வுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய மந்திரிக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதி உள்ளார்.
“பழங்குடியினர் மறுவாழ்வுக்கு உடனடி நடவடிக்கை தேவை” - மத்திய மந்திரிக்கு ராகுல் காந்தி கடிதம்
Published on

புதுடெல்லி,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். சமீபத்தில் பெய்த மழையால் அத்தொகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுதொடர்பாக மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை மந்திரி அர்ஜுன் முண்டாவுக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

எனது வயநாடு தொகுதியில் பழங்குடியினர் அதிகமாக உள்ளனர். சமீபத்திய வெள்ளம் மற்றும் நிலச்சரிவால், அவர்களின் வாழ்விடங்கள் அழிந்து விட்டன. விவசாய நிலங்களில் வண்டல் மண் படிந்திருப்பதால், அங்கு பயிர் விளைவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அந்த மக்கள், தங்களுக்கு விரைவாக இழப்பீடு கிடைக்கச் செய்ய வேண்டும் என்று கேட்டு வருகிறார்கள். கேரள வெள்ள சேதத்தை பார்வையிட மத்திய குழு வர உள்ளதாக அறிந்தேன்.

ஆகவே, பழங்குடியின மக்களின் மறுவாழ்வுக்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படாத வீடுகள் கட்டித்தர வேண்டும். சுத்தமான குடிநீருக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அவர்களுக்கு உடனடியாக இழப்பீடு தொகை கிடைக்கச் செய்ய வேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.

மேலும், கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கும் ராகுல் காந்தி தனியாக ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

வயநாடு தொகுதியில், சாலியார் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கைப்பினிகடவு பாலம், வெள்ளத்தால் உடைந்து விட்டது. இதனால், குறும்பலங்கோடு, சுங்கதாரா கிராமங்கள் ஒன்றுக்கொன்று துண்டிக்கப்பட்டு விட்டன. ஆகவே, அந்த பாலத்தை விரைந்து கட்டித்தர வேண்டும். அதுவரை, ஆற்றைக் கடக்க தற்காலிக ஏற்பாடு ஒன்றை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com