6-ம் வகுப்புக்கான மும்மொழிக் கொள்கையை அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்துங்கள் - சுப்ரீம்கோர்ட்டு அறிவுறுத்தல்

6-ம் வகுப்பு மாணவர்களுக்கும் நடப்பு கல்வி ஆண்டில் இருந்து மும்மொழி கொள்கை கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

6-ம் வகுப்பு மாணவர்களுக்கான மும்மொழிக் கொள்கையை அடுத்த கல்வி ஆண்டில் இருந்து அமல்படுத்துவது பற்றி பரிசீலிக்குமாறு சி.பி.எஸ்.இ.யை சுப்ரீம் கோர்ட்டு கேட்டுக்கொண்டது.

மும்மொழி கொள்கை கட்டாயம்

சி.பி.எஸ்.இ. 9-ம் வகுப்பு மாணவர்கள் நடப்பாண்டு ஜூலை 1-்ந் தேதியில் இருந்து 3 மொழிகள் படிப்பது கட்டாயம் என்று சி.பி.எஸ்.இ. கடந்த மே 15-ந்தேதி சுற்றறிக்கை வெளியிட்டது. அவற்றில் 2 மொழிகள், இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும் கூறியது.

அதுபோல், 6-ம் வகுப்பு மாணவர்களுக்கும் நடப்பு கல்வி ஆண்டில் இருந்து மும்மொழி கொள்கை கட்டாயம் என்றும் அறிவித்தது. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு 3-வது மொழிக்கு பொதுத்தேர்வு நடத்தப்படாது என்றும் தெரிவித்தது.

வழக்கு

மும்மொழிக் கொள்கை அமலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் பெற்றோரும், கல்வியாளர்களும் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுக்களை விசாரிக்க ஒப்புக்கொண்ட கோர்ட்டு, மத்திய அரசுக்கும், சி.பி.எஸ்.இ., என்.சி.இ.ஆர்.டி. ஆகியவற்றுக்கும் நோட்டீஸ் அனுப்பியது.

அடுத்த கல்வி ஆண்டு

இந்நிலையில், தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பக்சி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று இம்மனுக்கள் மீண்டும் விசாரணைக்கு வந்தன.

விசாரணை தொடங்கியதும், நீதிபதி ஜோய்மால்யா பக்சி, "குழந்தைகளின் வசதிக்காக, 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழி கொள்கை அமலாக்கத்தை அடுத்த கல்வி ஆண்டுக்கு தள்ளிவைப்பது பற்றி சி.பி.எஸ்.இ. பரிசீலிக்க வேண்டும். ஒருவேளை 6-ம் வகுப்பு மாணவர்கள் யாராவது நடப்பு கல்வி ஆண்டில் இருந்தே 3 மொழிகள் படிக்க விரும்பினால் அதற்கு அனுமதிக்கலாம்" என்று கூறினார்.

புதிய அறிவிப்பு

அதற்கு சி.பி.எஸ்.இ. சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா "இந்த யோசனையை சி.பி.எஸ்.இ. பரிசீலித்து புதிய அறிவிப்பை வெளியிடும்" என்று கூறினார்.

நீதிபதிகள் கூறுகையில், "இருதரப்பினரின் உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் எங்கள் யோசனைகளை தெரிவித்துள்ளோம். நிஜ பிரச்சினைகள் பின்னர் தீர்மானிக்கப்படும்" என்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com