தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களில் ஒரே அவசர உதவி எண் ‘112’ அமலுக்கு வந்தது

தேசிய அளவிலான ஒரே அவசர உதவி எண் ‘112’ தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களில் அமலுக்கு வந்தது.
தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களில் ஒரே அவசர உதவி எண் ‘112’ அமலுக்கு வந்தது
Published on

புதுடெல்லி,

அவசர போலீஸ், தீயணைப்பு, ஆம்புலன்ஸ் என பல்வேறு அவசர தேவைகளுக்கு வெவ்வேறு உதவி எண்கள் நடைமுறையில் உள்ளன. இந்நிலையில், அமெரிக்காவைப் போல், எல்லா அவசர தேவைக்கும் நாடு முழுவதும் ஒரே அவசர உதவி எண்ணை அறிமுகப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டது. 112 என்ற அந்த எண் நேற்று அமலுக்கு வந்தது. முதல்கட்டமாக, தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இதை அமல்படுத்துகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் இந்த எண் அமலுக்கு வந்து விடும்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் முன்னிலையில், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி மேனகா காந்தி இந்த எண்ணையும், 112 என்ற செயலியையும் (ஆப்) தொடங்கி வைத்தார்.

அப்போது, இந்த எண்ணை தவறாகவோ, வேடிக்கைக்காகவோ பயன்படுத்த வேண்டாம் என்று பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டார்.

ஸ்மார்ட் போனில், பவர் பொத்தானை 3 தடவை அழுத்தினால், அவசர உதவி மையத்துக்கு அழைப்பு செல்லும்வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அழைப்பை கையாள திறமையான நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உதவி கேட்டவர்கள் பற்றிய தகவலை, அவர்களுக்கு அருகில் உள்ள சம்பந்தப்பட்ட பிரிவுக்கு அவர்கள் அனுப்பி வைப்பார்கள். இதன்மூலம், உடனடியாக உதவி கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவசர போலீஸ் எண்ணான 100 உள்பட தற்போது நடைமுறையில் உள்ள உதவி எண்கள் அனைத்தும் 112 எண்ணுடன் ஒருங்கிணைக்கப்படுவதாகவும் அவர்கள் கூறினர்.

இத்துடன், பாதுகாப்பான நகர அமலாக்க கண்காணிப்பு இணையதளத்தையும், பாலியல் குற்ற வழக்கு விசாரணை நிலவரத்தை ஆன்லைனில் அறியும் திட்டத்தையும் ராஜ்நாத் சிங்கும், மேனகா காந்தியும் தொடங்கி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com