மணிப்பூர் விவகாரம்: பிரதமர் மோடி அவைக்கு வந்து பேச வேண்டும்; மக்களவையில் தயாநிதி மாறன் வலியுறுத்தல்

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களை பாஜக அரசு தவறாக பயன்படுத்துகிறது என மக்களவையில் தயாநிதி மாறன் கூறினார்.
மணிப்பூர் விவகாரம்: பிரதமர் மோடி அவைக்கு வந்து பேச வேண்டும்; மக்களவையில் தயாநிதி மாறன் வலியுறுத்தல்
Published on

புதுடெல்லி,

டெல்லி அரசு அதிகாரிகள் நியமனம் தொடர்பான மசோதாவை இன்று மக்களவை உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிமுகப்படுத்தினார். மக்களவையில் 9 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்பிய நிலையில் மசோதாக்கள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. டெல்லி அரசு அதிகாரிகள் நியமன சட்டம் தொடர்பாக மக்களவையில் காரசார விவாதம் நடைபெற்று வருகிறது.

டெல்லி அரசில் அதிகாரிகள் நியமனத்தில் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கும் மசோதா மீதான விவாதம் மக்களவையில் நடந்து வரும் நிலையில், இம்மசோதாவுக்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அப்போது, பேசிய திமுக எம்.பி. தயாநிதி மாறன், இம்மசோதா சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிரானது என்றும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களை பாஜக அரசு தவறாக பயன்படுத்துகிறது எனவும் விசாரணை அமைப்புகளுடன் பாஜக அரசு ரகசிய கூட்டணி அமைத்துச் செயல்படுகிறது என்றும்  "இந்தியா" கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு விசாரணை அமைப்புகள், தற்போது போன்று தவறாக பயன்படுத்தப்பட மாட்டாது என்றும் கூறினார்.

2024ல் நீங்கள் எதிர்க்கட்சி, நாங்கள் ஆளும் கட்சியாக இருப்போம். மணிப்பூர் விவகாரம் குறித்து பேசும்போது, பிரதமர் அவையில் இருக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை.

மேலும் உலகமே ஒரு குடும்பம் என்று பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால், தனது குடும்பத்தில் ஒரு பகுதியான மணிப்பூர் பற்றி எரியும்போது அதைப் பற்றி ஏன் பேசாமல் இருக்கிறார் என கேள்வி எழுப்பிய தயாநிதி மாறன்,

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கினாலும் பாஜகவில் சேர்ந்தால் அவர்கள் குற்றமற்றவர்களாக மாறிவிடுவது எப்படி? எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களை பாஜக அரசு தவறாக பயன்படுத்துகிறது.  தமிழ்நாட்டில் ஆளுநர் ரவி, மசோதாக்களை கிடப்பிலேயே வைத்துள்ளார் என கூறினார். தயாநிதிமாறன் பேச்சுக்கு பாஜக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது "உண்மை சுடத்தான்" செய்யும் என்று காரசாரமாக பதில் அளித்தார்.

டெல்லி நிர்வாக சிறப்பு மசோதா குறித்த விவாதத்தில் மத்திய சென்னை மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் பேசிக்கொண்டிருக்கும்போது துணை சபாநாயகர் ராஜேந்திர அகர்வால் நேரம் முடிந்து விட்டது எனக் கூறி அவர் பேச அனுமதி மறுத்த நிலையில், திமுக எம்.எல்.ஏ.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

தமிழ்நாட்டில் கவர்னர் ஆர்.என்.ரவி மசோதாக்களை கிடப்பில் போட்டுள்ளதாக குற்றம் சாட்டி கொண்டிருந்தபோது இடை நிறுத்தி நேரம் முடிந்து விட்டதாக கூறினார் துணை சபாநாயகர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com