

கவுகாத்தி,
அசாமில் கடந்த 1ந்தேதி 2வது கட்ட வாக்கு பதிவு நடந்தது. இதில், திமா ஹசாவ் மாவட்டத்தில் ஹப்லாங் தொகுதிக்கு உட்பட்ட பூத் ஒன்றில் 181 வாக்குகள் பதிவாகின. ஆனால், அந்த பூத்திற்கு உட்பட்ட பகுதியில் 90 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களே உள்ளனர்.
கடந்த 2016ம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜ.க.வின் பீர் பத்ரா ஹேக்ஜர் இந்த தொகுதியை வென்றுள்ளார். இந்நிலையில், நடந்து முடிந்த வாக்கு பதிவில் 74 சதவீத அளவுக்கே வாக்குகள் பதிவாகி உள்ளன.
அதில், 181 வாக்குகள் பதிவாகி உள்ளன என தெரிய வந்தது தேர்தல் ஆணையத்திற்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து 6 தேர்தல் அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த பூத்தில் மறு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது என கூறப்படுகிறது.