

புதுடெல்லி,
டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், அரசு தலைமைச்செயலாளர் அன்ஷூ பிரகாஷ் கலந்து கொண்டார். அப்போது ஆளும் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 2 பேர், தலைமைச்செயலாளரை தாக்கியதாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் டெல்லி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த டெல்லி போலீசார், இன்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில், டெல்லியில் தலைமைச்செயலாளர் தாக்கப்பட்டதற்கு முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியா மற்றும் 11 எம்.எல்.ஏக்களே பொறுப்பு என்று தெரிவித்துள்ளனர்.
குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், வரும் அக்டோபர் 25 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று முதல் மந்திரி கெஜ்ரிவால், மனிஷ் சிசோடியா உள்பட 11 எம்.எல்.ஏக்களுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.