சிக்கமகளூருவில்பார்வையற்ற சிறுமி கர்ப்பம்

சிக்கமகளூருவில் பார்வையற்ற சிறுமி கர்ப்பமாக்கிய வாலிபர் மரபணு பரிசோதனை மூலம் சிக்கினார்.
சிக்கமகளூருவில்பார்வையற்ற சிறுமி கர்ப்பம்
Published on

சிக்கமகளூரு:-

சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா எம்.சி.ஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இந்த சிறுமிக்கு கண்பார்வை கிடையாது. இந்தநிலையில் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிறுமி வீட்டில் தனியாக இருந்தார். இதை அறிந்த மர்ம நபர் ஒருவர், வீட்டிற்குள் புகுந்து சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இந்த சம்பவத்தை வெளியே கூற கூடாது என்று மிரட்டிவிட்டு சென்றுள்ளார்.

இந்தநிலையில் சிறுமி கர்ப்பமானாள். இதையடுத்து இந்த சம்பவம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் தரிகெரே போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடி வந்தனர். இந்தநிலையில் சிறுமிக்கு குழந்தை பிறந்தது. இதையடுத்து போலீசார் குழந்தையின் மரபணுவை பரிசோதனை செய்தனர். 

பின்னர் அந்த மரபணுவை வைத்து, எம்.சி.ஹள்ளியை சேர்ந்த இளைஞர்களின் மரபணுவுடன் ஒத்து போகிறதா என்று சோதனை செய்தனர். அதாவது சந்தேகப்படும் இளைஞர்களை மடக்கி பிடித்து அவர்களுக்கு மரபணு பரிசோதனை செய்தனர். இந்தநிலையில் எம்.பி.ஹள்ளியை சேர்ந்த ஹரிஷ் (வயது 19) என்ற வாலிபரின் மரபணுவும், குழந்தையின் மரபணுவும் ஒத்துப்போனது.

இதையடுத்து ஹரிசை மடக்கி பிடித்த போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது ஹரிஷ் சிறுமியை பலாத்காரம் செய்ததை ஒப்பு கொண்டார். இதையடுத்து போலீசார் ஹரிசை கைது செய்தனர். மேலும் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com