

புதுடெல்லி,
நாட்டின் தலைநகரான டெல்லி கொரோனா வைரஸ் தொற்று மையமாக திகழ்கிறது. இங்கு இந்த வைரஸ், ஏறத்தாழ 1,900 பேரை பாதித்து இருக்கிறது. 40-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
அறிகுறிகளே இல்லாமல் பலரையும் கொரோனா தாக்கி வருகிறது. அங்கு நேற்று மாலை நிலவரப்படி கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்கள் என 77 மண்டலங்கள் அடையாளம் காணப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன.
அங்கிருந்து பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதற்கு அனுமதி கிடையாது. அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அதிகாரிகள் அவர்களுடைய வீட்டு வாசலுக்கே வந்து வினியோகிப்பதை அரசு உறுதி செய்துள்ளது.
ஒரு பகுதி கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது என்றால், அரசு அதிகாரிகளும், போலீஸ் அதிகாரிகளும் ஒரு வாட்ஸ் அப் குழுவை உருவாக்குகிறார்கள். மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளை வாட்ஸ்-அப் குழுக்களுக்கு தெரிவிப்பார்கள். அரசு அதை நிறைவேற்றி வைக்கும்.
இந்தநிலையில்தான் கட்டுப்பாட்டு மண்டலங்களில் வாழ்கிற பொதுமக்கள் அத்தியாவசியப்பொருட்கள் வினியோகம் என்ற பெயரில் அரசு அதிகாரிகளிடம் வினோதமான கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள்.
இதுபற்றி டெல்லி புறநகர் பகுதியை சேர்ந்த நரேலா செய்தி நிறுவனம் ஒன்றிடம் கூறுகையில், இந்தப் பகுதி மக்கள் சூடான கோழிப்பிரியாணி வேண்டும், ஆட்டுக்கறி பிரியாணி வழங்க வேண்டும் என்று அதிகாரிகளை கேட்கிறார்கள் என கூறினார்.
9 கட்டுப்பாட்டு மண்டலங்களை கொண்டுள்ள தெற்கு டெல்லியில், சிலர் பீட்சா வேண்டும் என்கிறார்கள், இன்னும் சிலர் சூடான சமோசா வேண்டும் என கேட்டு தொல்லை செய்கிறார்கள் என்று ஒரு அதிகாரி குமுறினார்.
கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வசிக்கிற மக்கள் இனிப்பு பலகாரங்கள் வழங்க வேண்டும் என்று கேட்பதாக மற்றொரு அதிகாரி ஆதங்கத்துடன் கூறினார். அதே நேரத்தில் இத்தகைய அற்பமான கோரிக்கைகளுக்கு தாங்கள் செவி சாய்ப்பதில்லை என்று பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு அதிகாரி தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் என்ற கண்ணுக்குத் தெரியாத எதிரியை வீழ்த்துவதற்கு நாங்கள் எத்தனை விதமான சோதனைகளை எதிர் கொள்ள வேண்டியதிருக்கிறது என அதிகாரிகள் நொந்துபோய் கூறினர்.