டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய கொடி ஏற்றினார் குடியரசு தினவிழா கோலாகலம் கண்கவர் அணிவகுப்பை பிரதமர் மோடி பார்வையிட்டார்

டெல்லியில் நேற்று கோலாகலமாக நடைபெற்ற குடியரசு தின விழாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றினார். இதையொட்டி நடைபெற்ற கண்கவர் அணிவகுப்பை பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பார்வையிட்டனர்.
டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய கொடி ஏற்றினார் குடியரசு தினவிழா கோலாகலம் கண்கவர் அணிவகுப்பை பிரதமர் மோடி பார்வையிட்டார்
Published on

புதுடெல்லி,

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, கடந்த 1950-ம் ஆண்டு ஜனவரி 26-ந்தேதி குடியரசாக அறிவிக்கப்பட்டது.

இதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 26-ந்தேதி குடியரசு தினவிழாவாக கொண்டாடப்படுகிறது.

அதன்படி 70-வது குடியரசு தினவிழா நேற்று நாடு முழுவதும் மிகுந்த உற்சாகத்துடனும், குதூகலத்துடனும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி டெல்லியில் கோலாகலமான கொண்டாட்டங்கள் அரங்கேறின. இந்த ஆண்டு தேசத்தந்தை காந்தியடிகளின் 150-வது பிறந்த ஆண்டு என்பதால், அவரது கொள்கைகள் மற்றும் வாழ்க்கையை கருப்பொருளாக கொண்டு விழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

விழாவில் முதலாவதாக போரில் உயிர் நீத்த வீரர்களின் நினைவாக டெல்லியில் அமைக்கப்பட்டு உள்ள அமர்ஜவான் ஜோதியில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் விழா நடைபெறும் ராஜபாதைக்கு வந்து சேர்ந்தார். அவர் ஆரஞ்சு நிற தலைப்பாகை அணிந்து விழாவில் பங்கேற்றார்.

பின்னர் குடியரசு தினவிழாவுக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமாபோசா விழா மேடைக்கு வந்தார். அவரை பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகள் வரவேற்றனர். அவரைத் தொடர்ந்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ராஜபாதைக்கு வந்து சேர்ந்தார்.

இறுதியில் குதிரைப்படை வீரர்களின் அணிவகுப்புடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விழா மேடைக்கு வந்தார். அவரை பிரதமர் மோடி மற்றும் வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் ராம்நாத் கோவிந்த் தேசியகொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது 21 குண்டுகள் முழங்க தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

பின்னர், காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் நசிர் அகமது வானிக்கு (வயது 38) இந்தியாவின் உயரிய விருதான அசோக சக்ரா விருதை (மரணத்துக்குப்பின்) ராம்நாத் கோவிந்த் வழங்கினார். இந்த விருதை அவரது மனைவி பெற்றுக்கொண்டார். நசிர் அகமது வானி பயங்கரவாதியாக இருந்து பின்னர் ராணுவத்தில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வை தொடர்ந்து நாட்டின் வலிமையை பறைசாற்றும் முப்படையினரின் அணிவகுப்பு தொடங்கியது. இதில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் அடங்கி இருந்தன. குறிப்பாக நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய, 90 வயதை கடந்த 4 வீரர்கள் முதல் முறையாக ராஜபாதை அணிவகுப்பில் பங்கேற்றனர்.

விமானப்படையின் இலகு ரக தாக்குதல் விமானம், சுகோய்-30எம்.கே.ஐ. விமானம், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணைகள் உள்ளிட்ட நவீன ஏவுகணைகளின் கம்பீர அணிவகுப்பு நாட்டின் ராணுவ வலிமையை உலகுக்கு பறைசாற்றுவதாக அமைந்தது.

இதைப்போல தரைப்படையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பு கூட்டத்தினரை வியக்க வைத்தது. அவர்களை தொடர்ந்து 144 போர் விமானிகள் உள்பட விமானப்படை வீரர்களின் அணிவகுப்பும், லெப்டினன்ட் கமாண்டர் அம்பிகா சுதாகரன் தலைமையில் 144 இளம் மாலுமிகளின் அணிவகுப்பும் பார்வையாளரின் கவனத்தை ஈர்த்தது.

அத்துடன் கடற்படை, விமானப்படை சார்பில் அலங்கார ஊர்திகளும் ராஜபாதையில் அணிவகுத்து வந்தன. இடையில் முப்படையினரின் வீரசாகசங்கள் நிகழ்த்தி காட்டப்பட்டன. அவற்றுக்கு பார்வையாளர்கள் பலத்த கரவொலியால் பாராட்டு தெரிவித்தனர்.

பின்னர் துணை ராணுவம், தேசிய மாணவர் படை, என்.எஸ்.எஸ். மாணவர்களும் சிறப்பான அணிவகுப்பை நடத்திச்சென்றனர். இடையில் வீரதீர செயல்களுக்காக ஜனாதிபதி விருது பெற்ற குழந்தைகள் திறந்த ஜீப்பில் அழைத்துச்செல்லப்பட்டனர்.

முப்படை அணிவகுப்பை தொடர்ந்து மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுத்தன. அவை அனைத்தும் மகாத்மா காந்தியின் கொள்கைகளை கருப்பொருளாக கொண்டு வடிவமைக்கப்பட்டு இருந்தன. அத்துடன் மாநிலங்களின் கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பான கலைநிகழ்ச்சிகளும் அரங்கேறின.

விழாவின் முத்தாய்ப்பாக, வானில் போர் விமானங்களின் சாகசங்கள் அரங்கேறின. இதில் ஹெர்குலிஸ், சுகோய்-30 எம்.கே.ஐ., குளோப்மாஸ்டர், ஜாகுவார், மிக்-29 போன்ற விமானங்கள் மற்றும் இலகு ரக ஹெலிகாப்டர்களின் சாகசங்கள் பார்வையாளர்களை மெய் சிலிர்க்க வைத்தன.

இறுதியில் தேசிய கீதத்துடன் விழா நிறைவடைந்தது. அப்போது மூவர்ண பலூன் கள் பறக்கவிடப்பட்டன.

90 நிமிடம் நடந்த இந்த விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய மந்திரிகள், முப்படை தளபதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். மேலும் பல்வேறு வெளிநாட்டு பிரதிநிதிகள் விழாவில் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக் கான பொதுமக்களும் விழா நிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர்.

பெண் கமாண்டோக்கள் முதல் போக்குவரத்து காவலர் வரை சுமார் 25 ஆயிரம் வீரர்கள் தலைநகரில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com