14-வயதுக்கு மேற்பட்ட பயணிகளுக்கு ஆரோக்கிய சேது செயலி கட்டாயம்- விமான பயணத்திற்கான புதிய வழிமுறைகள் வெளியீடு

25-ஆம் தேதி முதல் துவங்கும் உள்நாட்டு விமான சேவைகளுக்கான புதிய வழிகாட்டுதல் நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
14-வயதுக்கு மேற்பட்ட பயணிகளுக்கு ஆரோக்கிய சேது செயலி கட்டாயம்- விமான பயணத்திற்கான புதிய வழிமுறைகள் வெளியீடு
Published on

புதுடெல்லி,

கொரோனா நோய் பரவல் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல், நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் அத்தியாவசிய சேவைகள் தவிர பஸ், ரெயில், விமானம் உள்ளிட்ட அனைத்து வகையான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. பின்னர் அவ்வப்போது ஊரடங்கு தொடர்பான பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

இதைத்தொடர்ந்து, புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காகக் கடந்த 1-ந்தேதி முதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. வருகிற ஜூன் 1-ந்தேதி முதல் நகரங்கள் மற்றும் சிறிய நகரங்களுக்கு இடையே பயணிகள் ரெயில் இயக்கப்படும் என்று ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் நேற்று முன்தினம் அறிவித்து உள்ளார்.

4-வது கட்டமாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு வருகிற 31-ந்தேதியுடன் முடிவடைய இருக்கிறது. விமான போக்குவரத்தை பொறுத்தமட்டில், வெளிநாடு மற்றும் உள்நாட்டு பயணிகள் விமான சேவை அறவே நிறுத்தப்பட்டது. வந்தே பாரத் திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட இந்தியர்களை மீட்டு வருவதற்காக மட்டும் சில விமானங்கள் இயக்கப்பட்டன. இதைப்போல மருந்து பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை கொண்டு செல்வதற்காகவும் சில விமானங்கள் இயக்கப்படுகின்றன.

இதனால் பெரும்பாலான விமானங்கள், விமானநிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. அவ்வப்போது விமானங்களில் பராமரிப்பு பணிகள் மட்டும் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே ஊரடங்கு முடிவடைந்த பிறகுதான் விமான போக்குவரத்து தொடங்கும் என கூறப்பட்டது. உள்நாட்டு விமான போக்குவரத்து அதற்கு முன்பே, அதாவது வருகிற 25-ந் தேதி முதல் தொடங்கும் என்ற அறிவிப்பு நேற்று வெளியானது.

இந்த நிலையில், ஊரடங்கு காலத்தில் இயக்கப்படும் விமானங்களில் பயணிப்பவர்களுக்கு புதிய நடைமுறைகளை இந்திய விமான நிலைய ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, உடல் வெப்ப நிலையை அளவிடும் தெர்மல் ஸ்கிரீனிங் பகுதி வழியாகச் சென்றே விமான நிலையத்திற்குள் பயணிகள் செல்ல வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதேபோல், 14-வயதிற்குட்பட்ட சிறார்களைத் தவிர அனைவரும் கட்டாயம் ஆரோக்கிய சேது செயலியை செல்போனில் நிறுவியிருக்க வேண்டும். விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். பயணிகள் 2 மணி நேரத்திற்கு முன்பாகவே விமான நிலையத்திற்கு வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com