

காந்தி நகர்,
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ந் தேதி மத்திய அரசு பழைய ரூ.500, 1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது. மேலும் இந்த முகமதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அல்லது முகமதிப்பில் 5 மடங்கு தொகை அபராதம் விதிக்கும் வகையில் புதிய சட்டம் ஒன்றும் இயற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை வைத்திருப்பது தெரிய வந்தால் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை இயக்குனரகம் அவற்றை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், சட்டசபை தேர்தல் நடைபெறும் குஜராத் மாநிலத்தின் பரூச் நகரில் ஒரு கட்டிடத்தில் செல்லாத நோட்டுகள் பதுக்கிவைக்கப்பட்டு இருப்பதாக வருவாய் புலனாய்வுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சூரத் நகர வருவாய் புலனாய்வுத்துறை, வதோரா சி.ஜி.எஸ்.டி. பிரிவு அதிகாரிகள் விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அந்த கட்டிடத்தின் ஒரு அறையில் கட்டுக்கட்டாக பழைய ரூ.500, 1,000 நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. அவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர். அதில் மொத்தம் ரூ.48 கோடியே 90 லட்சத்து 96 ஆயிரம் முக மதிப்பு கொண்ட செல்லாத நோட்டுகள் இருந்தது. இதுதொடர்பாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் 3 பேர் மீது கோர்ட்டில் புகார் செய்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட ரூ.49 கோடி செல்லாத நோட்டுகளை வைத்திருந்தவர்களுக்கு அதன் முக மதிப்பில் 5 மடங்கு அபராதம் செலுத்தவேண்டும் என சட்டம் இருப்பதால் இதற்காக விதிக்கப்படும் அபராதத் தொகை ரூ.245 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.