89 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் குஜராத்தில் பிரசாரம் ஓய்ந்தது நாளை ஓட்டுப்பதிவு

குஜராத்தில் முதல்கட்ட தேர்தல் நடக்கிற 89 தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது. நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது.
89 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் குஜராத்தில் பிரசாரம் ஓய்ந்தது நாளை ஓட்டுப்பதிவு
Published on

காந்திநகர்,

பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், 182 இடங்களை கொண்ட சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.

22 ஆண்டுகளாக நடைபெற்று வருகிற ஆட்சியை தொடர்வதற்கு பா.ஜனதா கட்சியும், அந்தக் கட்சியிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற காங்கிரசும் போராடி வருகின்றன. இந்த தேர்தல், முதல்-மந்திரி விஜய் ரூபானிக்கு அமில சோதனையாக அமைந்துள்ளது.

எனவே இந்த தேர்தல், நாடு முழுவதும் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

முதல் கட்ட தேர்தல்

இந்த தேர்தலில் முதல் கட்டமாக 89 தொகுதிகளில் நாளை (சனிக்கிழமை) ஓட்டுப்பதிவு நடக்கிறது. மீதி 93 தொகுதிகளில் 14-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.

முதல் கட்ட தேர்தல் நடக்கிற பகுதிகளில் பா.ஜனதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் கட்சிக்கு அதன் வருங்கால தலைவர் ராகுல் காந்தியும் நட்சத்திர பிரசாரகர்களாக இருந்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

பிரதமர் மோடி சுமார் 15 கூட்டங்களில் பங்கேற்று பேசினார். ராகுல் காந்தி ஒரு வாரத்துக்கு மேல் முகாமிட்டு தீவிர பிரசாரம் செய்தார். இது வளர்ச்சிக்கும், பரம்பரை அரசியலுக்கும் இடையேயான போட்டி என அவர் வர்ணித்தார். பா.ஜனதா பிரசாரத்தில் மத்திய, மாநில அரசுகளின் வளர்ச்சிப்பணிகள் முக்கிய இடம் வகித்தது.

காங்கிரஸ் கட்சி, பட்டேல் இனத்தவருக்கு இட ஒதுக்கீடு வழங்க போராடி வருகிற ஹர்திக் பட்டேலுடன் கை கோர்த்து பிரசாரம் செய்தது. பட்டேல் இனத்தவருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்பது காங்கிரசின் முக்கிய பிரசாரமாக அமைந்தது.

பிரசாரம் ஓய்ந்தது

இந்த நிலையில், பிரதமர் மோடி, சூரத்தில் நேற்று இறுதிக்கட்ட பிரசாரம் செய்தார். அப்போது அவர், காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்கு தடைகளை ஏற்படுத்துவதாகவும், திட்டங்களை தாமதப்படுத்துவதாகவும், நடப்பு பணிகளை தடம் புரளச்செய்வதாகவும் குற்றம் சாட்டினார்.

பா.ஜனதா தலைவர் அமித் ஷா, சவுராஷ்டிரா பகுதியில் இறுதிக்கட்ட பிரசாரம் செய்தார்.

ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு டுவிட்டரில் தொடர்ந்து கேள்விக்கணைகளை எழுப்பி ஆன்லைன் பிரசாரத்தில் ஈடுபட்டார். நேற்று அவர் பிரசாரம் செய்யவில்லை. நகர்ப்புறங்களில் பா.ஜனதாவுக்கும், கிராமப்புறங்களில் காங்கிரசுக்கும் ஆதரவு அலைகள் வீசுவதாக தகவல்கள் கூறுகின்றன.

நாளை ஓட்டுப்பதிவு

முதல் கட்ட தேர்தலை சந்திக்கிற 89 தொகுதிகளில் நாளை (சனிக்கிழமை) ஓட்டுப்பதிவு நடக்கிறது. இது, 57 பெண்கள் உள்ளிட்ட 977 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலத்தை முடிவு செய்கிறது.

வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகக்கடமையை ஆற்றுவதற்காக 24 ஆயிரத்து 689 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

2 கட்ட தேர்தல்களும் முடிந்த பின்னர் 18-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

கருத்துக்கணிப்பு

இதற்கிடையே பல்வேறு தரப்பினரும் கருத்துக்கணிப்புகள் நடத்தி முடிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

3 கருத்துகணிப்புகளின் சராசரி மூலம், பா.ஜனதா 105-106 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்கும் என தெரியவந்துள்ளது. கடந்த 2012 சட்டசபை தேர்தலில் 116 இடங்களில் அந்தக் கட்சி வெற்றி பெற்றது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 73-74 இடங்கள் கிடைக்கும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. கடந்த 2012 தேர்தலில் இந்தக் கட்சிக்கு 60 இடங்கள் கிடைத்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com