வக்பு திருத்த சட்ட வழக்கில் இடைக்கால உத்தரவு ஒத்திவைப்பு

வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்கில் 3 நாட்களாக விவாதம் நடந்த நிலையில், இடைக்கால உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது.
புதுடெல்லி,
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்பு திருத்த சட்டம், அரசியல் அமைப்பு சட்டப்படி செல்லாது என்று அறிவிக்கக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் 70-க்கு மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த 20-ந் தேதி, தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மசி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை தொடங்கியது.
மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி, ராஜீவ் தவான் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்2-வது நாளாக நேற்று முன்தினம் நடந்த விசாரணையில், மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதிட்டார்.தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று 3-வது நாளாக விசாரணை நடந்தது.
இதையடுத்து, இடைக்கால உத்தரவை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். அப்போது, ''நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம் அரசியல் அமைப்பு சட்டப்படி செல்லும் என்ற அனுமானம் உள்ளது என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்'' என்று தலைமை நீதிபதி கூறினார்.
கோர்ட்டு, மரபுவழி பயன்பாடு, பத்திரம் ஆகியவை அடிப்படையில் அறிவிக்கப்பட்ட வக்பு சொத்துகளை ரத்து செய்யும் அதிகாரம், மத்திய வக்பு கவுன்சில், மாநில வக்பு வாரியங்களில் முஸ்லிம் அல்லாதவர்கள் நியமனம், வக்பு நிலம் பற்றிய கலெக்டர் விசாரணை முடியும்வரை அது வக்பு சொத்தாக கருதப்படாது என்ற சட்டப்பிரிவு ஆகிய 3 பிரச்சினைகள் மீது இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.






