இந்தியாவில் 24 மணி நேரத்தில் 50 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் 24 மணி நேரத்தில் சுமார் 50 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் 24 மணி நேரத்தில் 50 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் கோரதாண்டவம் ஆடிவரும் கொரோனா, இதுவரை இல்லாத அளவில் 24 மணி நேரத்தில் சுமார் 50 ஆயிரம் பேரை பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. இது தொடர்பாக நேற்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவர பட்டியலில், புதிதாக 49 ஆயிரத்து 931 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுபோக இதே 24 மணி நேரத்துக்குள் கொரோனா 708 பேரின் உயிரையும் காவு வாங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14 லட்சத்து 35 ஆயிரத்து 453 ஆகவும், பலியானவர்கள் எண்ணிக்கை 32 ஆயிரத்து 771 ஆகவும் உயர்ந்து இருக்கிறது.

இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் மராட்டியம் முதல் இடம் வகிக்கிறது. அங்கு மட்டும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். மேலும் அங்கு புதிதாக உயிரிழந்த 267 பேருடன் சேர்த்து, கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 656 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் 2-வது இடத்தில் தமிழகம் உள்ளது. இங்கு பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியுள்ள நிலையில், கொரோனா பிடியில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 3,571 ஆக உள்ளது. 3-வது இடத்தில் உள்ள தேசிய தலைநகர் டெல்லியில் பாதிப்பு 1 லட்சத்து 30 ஆயிரத்து 606 ஆகவும், உயிரிழப்பு 3,827 ஆகவும் உயர்ந்து இருக்கிறது. 4-வது இடத்தில் உள்ள கர்நாடகாவிலும், 5-வது இடத்தில் உள்ள ஆந்திராவிலும் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை நெருங்கி உள்ளது. பலியை பொறுத்தவரையில் கர்நாடகாவில் 1,878 பேரும், ஆந்திராவில் 1,041 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையுடன், அந்த வைரசின் பிடியில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை (அடைப்புக்குறிக்குள்) வருமாறு:-

உத்தரபிரதேசம் பாதிப்பு- 66,988 (பலி-1,426), மேற்குவங்காளம் 58,718 (1,372), குஜராத் 55,822 (2,326), தெலுங்கானா 54,059 (463), பீகார் 39,176 (244), ராஜஸ்தான் 35,909 (621), அசாம் 32,228 (79), அரியானா 31,332 (392), மத்தியபிரதேசம் 27,800 (811), ஒடிசா 25,389 (140), கேரளா 19,025 (61), ஜம்மு காஷ்மீர் 17,920 (312), பஞ்சாப் 13,218 (306), ஜார்கண்ட் 8,275 (85), சத்தீஸ்கார் 7,450 (43), உத்தரகாண்ட் 6,104 (63), கோவா 4,861 (35), திரிபுரா 3,900 (13), புதுச்சேரி 2,786 (40), மணிப்பூர் 2,235, இமாசலபிரதேசம் 2,176 (12), நாகாலாந்து 1.339 (4), லடாக் 1,285 (4), அருணாசலபிரதேசம் (3), தாதர்நகர் ஹவேலி (2), சண்டிகார் (13), மேகாலயா (5), சிக்கிம், மிசோரம், அந்தமான் நிகோபார் தீவு.

* அடைப்புக்குறி இல்லாத மாநிலங்களில் கொரோனாவால் இதுவரை உயிரிழப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பாதிப்பு ஒருபுறம் மின்னல் வேகத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் கொரோனாவில் இருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. அந்த வகையில் 24 மணி நேரத்தில் மட்டும் 31 ஆயிரத்து 991 பேர் இந்த நோயில் இருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக எடுத்துக் கொண்டால், இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு உள்ளான 14 லட்சத்து 35 ஆயிரம் பேரில், 9 லட்சத்து 17 ஆயிரத்து 568 பேர் இந்த நோயில் இருந்து மீண்டுள்ளனர். இன்னும் 4 லட்சத்து 85 ஆயிரத்து 114 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com