இந்தியாவின் தூய்மையான நகரில்... எலி கடித்து 2 குழந்தைகள் பலியான விவகாரம்; பழங்குடி அமைப்பு காலவரையற்ற போராட்டம்

ஐ.சி.யு.வில் இருந்த குழந்தை ஒன்றின் விரல்களையும், மற்றொரு குழந்தையின் தலை மற்றும் தோள் பகுதியையும் எலிகள் கடித்து உள்ளன.
இந்தியாவின் தூய்மையான நகரில்... எலி கடித்து 2 குழந்தைகள் பலியான விவகாரம்; பழங்குடி அமைப்பு காலவரையற்ற போராட்டம்
Published on

இந்தூர்,

இந்தியாவின் தூய்மையான நகர் என்ற பெருமையை பெற்றது இந்தூர் நகரம். இந்நிலையில், அந்நகரில் உள்ள அரசு மருத்துவமனையில், ஐ.சி.யு.வில் சிகிச்சை பெற்ற 2 பெண் குழந்தைகளை எலி கடித்ததும், அதன்பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக அவை உயிரிழந்ததும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இதன் பின்னணியை பற்றி காண்போம்.

மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில், மாநிலத்தின் மிக பெரிய மருத்துவமனைகளில் ஒன்றாக அறியப்படுவது மகராஜா யஷ்வந்த்ராவ் அரசு மருத்துவமனை.

கடந்த ஆகஸ்டு மாதத்தில், அந்த மருத்துவமனைக்கு, புதிதாக பிறந்த 2 பெண் குழந்தைகள் சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டு இருந்தன. ஐ.சி.யு.வில் வைக்கப்பட்டு இருந்த அந்த 2 குழந்தைகளை ஆகஸ்டு 31-ந்தேதி எலிகள் கடித்து விட்டன என குற்றச்சாட்டு எழுந்தது.

இதுபற்றிய வீடியோ ஒன்றும் வெளிவந்து வைரலானது. இதனால் பெரும் சர்ச்சை வெடித்தது. இந்நிலையில், 2 பெண் குழந்தைகளும் அடுத்தடுத்து உயிரிழந்தன. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

75 ஆண்டுகள் பழமை வாய்ந்த மிக பெரிய அரசு மருத்துவமனையின் ஐ.சி.யு.வில், எலி கடித்தபின்பு, 2 குழந்தைகள் பலியான சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து, ஜெய் ஆதிவாசி யுவ சக்தி என்ற பழங்குடி அமைப்பு காலவரையற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளது. அந்த அமைப்பினர், மருத்துவமனையின் நுழைவு வாசலின் முன் அமர்ந்து நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்லூரியின் டீன் டாக்டர் அரவிந்த் கங்கேரியா மற்றும் மருத்துவமனையின் சூப்பிரெண்டான டாக்டர் அசோக் யாதவ் ஆகியோரின் அலட்சியமே இதற்கு காரணம் என அவர்கள் குற்றச்சாட்டாக தெரிவித்தனர். அவர்களை சஸ்பெண்டு செய்ய வேண்டும் என்றும் மூத்த டாக்டர்கள் 2 பேருக்கு எதிராகவும் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வரை, 2 பெண் குழந்தைகளின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்காது என பழங்குடி அமைப்பின் தேசிய தலைவர் லோகேஷ் முஜல்டா கூறியுள்ளார்.

அந்த பெண் குழந்தைகளில் ஒன்று பழங்குடியின சமூகத்தினருடையது. மற்றொன்று சிறுபான்மை சமூக குழந்தை ஆகும் என மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

அவர்களின் ஆர்ப்பாட்டம் எதிரொலியாக நோயாளிகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என மருத்துவமனை சூப்பிரெண்டான டாக்டர் பசந்த் குமார் நிங்வால் கூறினார்.

எனினும், இதுபற்றி அந்த மருத்துவமனையின் சூப்பிரெண்டான டாக்டர் அசோக் யாதவ் கூறும்போது, தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த குழந்தை ஒன்றின் விரல்களையும், மற்றொரு குழந்தையின் தலை மற்றும் தோள் பகுதியையும் எலிகள் கடித்து உள்ளன.

அவை இரண்டும் பிறந்து சில நாட்களேயான குழந்தைகள் ஆகும். அவற்றில் ஒரு குழந்தை கார்கோன் மாவட்டத்தில் யாருமற்ற நிலையில் கைவிடப்பட்டு கிடந்துள்ளது. அதனை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர் என்றார். முதல் குழந்தை உயிரிழப்புக்கு எலி கடித்தது காரணம் இல்லை. 1.2 கிலோ எடை கொண்ட, பிறந்து 3 நாளே ஆன அந்த பெண் குழந்தை கடுமையான இருதய பாதிப்புடன் இருந்தது.

அதனுடைய பெற்றோர் அதனை கைவிட்டு விட்டு சென்றுள்ளனர் என்றார். 2-வது குழந்தை உயிரிழந்தது பற்றி அந்த மருத்துவமனையின் துணை சூப்பிரெண்டு டாக்டர் ஜிதேந்திரா வர்மா செய்தியாளர்களிடம் கூறும்போது, செப்டிசீமியா எனப்படும் ரத்தத்தில் பாக்டீரியா கலந்து அதனால், குழந்தை உயிரிழந்து உள்ளது.

அந்த பெண் குழந்தை 1.6 கிலோ எடையுடன் இருந்தது. பல்வேறு உடல் பாதிப்புகளை கொண்டிருந்தது. 7 நாட்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை நடந்து குழந்தை பிறந்ததும், அதன் நிலைமை மோசமடைந்தது. அதன் இடது கையின் இரண்டு விரல்களை எலிகள் கடித்துள்ளன. இதனால், லேசான சிராய்ப்புகள் ஏற்பட்டன என கூறினார்.

இந்த சம்பவத்தில், பதவிகளில் இருந்து நீக்கம் மற்றும் பணியிடை நீக்கம் என 8 பபேருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பல்வேறு அதிகாரிகளுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டாக்டர் அசோக் யாதவ் உடல்நல பாதிப்புகளை காரணம் காட்டி நீண்ட விடுப்பில் உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com