

பெங்களூரு,
கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரல் பரவலை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கர்நாடக துணை முதல் மந்திரி அஸ்வத் நாராயண் பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
கொரோனா 3-வது அலை வந்தாலும் சரி, டெல்டா பிளஸ் வைரஸ் பரவினாலும் சரி, அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டால் அவற்றை நாம் தைரியத்துடன் எதிர்கொள்ள முடியும். யாரும் அலட்சியமாக இருக்கக்கூடாது. கர்நாடகத்தில் இதுவரை 2 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 1.70 கோடி பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது.
30 லட்சம் பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. கர்நாடகத்தில் மொத்த மக்கள்தொகையில் 37 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. மீதமுள்ள 63 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மத்திய அரசு அதிகளவில் தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. தனியார் நிறுவனங்களும் தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கி வருகின்றன.
இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.