கர்நாடகத்தில் இந்து அமைப்பினர் பஜனை பாடல்கள் பாடி போராட்டம்; பா.ஜனதா தலைவர்களும் பங்கேற்றதால் பரபரப்பு

பஜ்ரங்தள அமைப்புக்கு தடை விதிப்போம் என காங்கிரஸ் கூறியதால் கர்நாடகத்தில் இந்து அமைப்பினர் பஜனை பாடல்கள் பாடி நேற்று நூதன போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் பா.ஜனதா தலைவர்களும் பங்கேற்றதால் பரபரப்பை ஏற்படுத்தியது.
கர்நாடகத்தில் இந்து அமைப்பினர் பஜனை பாடல்கள் பாடி போராட்டம்; பா.ஜனதா தலைவர்களும் பங்கேற்றதால் பரபரப்பு
Published on

பெங்களூரு:

போராட்டம்

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிட்டது. அதில் பஜ்ரங்தள அமைப்புக்கு தடை விதிப்பதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு பா.ஜனதா, பஜ்ரங்தள அமைப்பு, விசுவ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தியது.

மேலும் பிரதமர் மோடியும், காங்கிரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரசார கூட்டங்களில் 'ஜெய் பஜ்ரங் பலி' என்று முழக்கமிட்டார். அதுபோல் கூட்டங்களில் பங்கேற்ற மக்களும் ஜெய் பஜ்ரங் பலி கோஷமிட்டனர்.

அத்துடன், பா.ஜனதாவினர் ஆஞ்சநேயர் கோவில்களில் மந்திரம் ஓதி பஜ்ரங்தள அமைப்புக்கு ஆதரவு தெரிவித்தனர். இதற்கிடையே 9-ந் தேதி(நேற்று) நாடு முழுவதும் அனுமன் பாடல்கள், மந்திரங்களை ஒலிப்பரப்புவதாக விசுவ இந்து பரிஷத் அமைப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

அனுமன் பாடல்கள் ஒலிபரப்பு

அதன்படி நேற்று பல்வேறு பகுதிகளில் இந்து அமைப்பினர் சார்பில் அனுமன் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. பெங்களூரு விஜயநகர் பகுதியில் உள்ள கோவில் முன்பு இந்து அமைப்பினர் சிலர் குவிந்தனர். அவர்கள் அங்கு நின்றபடி அனுமன் பஜனை பாடல்களை பாடி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேர்தல் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் தேதல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என கூறினர். மேலும் அவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து சிறிது நேரத்தில் இந்து அமைப்பினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பா.ஜனதா தலைவர்கள்

இந்த நிலையில் பா.ஜனதா தலைவர்கள் ஆஞ்சநேயர் கோவில்களுக்கு நேரில் சென்று சிறப்பு பூஜை செய்தனர். முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தார்வார் மாவட்டம் உப்பள்ளி விஜயநகரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று பூஜை செய்து வழிபட்டார். மேலும் அவர் ஆஞ்சநேயர் பஜனை பாடல்கள் பாடினார். ஆஞ்சநேயர் மந்திரங்களையும் கூறினார்.

மத்திய மந்திரி ஷோபா மகாலட்சுமி லே-அவுட்டில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது ஆஞ்சநேயரின் பஜனைகளை பாடினார். மாநில பா.ஜனதா துணைத்தலைவர் விஜயேந்திரா சிவமொக்காவில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு மனைவியுடன் சென்று சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். இன்று தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் மாநிலம் முழுவதும் பா.ஜனதா மற்றும் இந்து அமைப்பினர் நேற்று இந்த நூதன போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

டி.கே.சிவக்குமார் சாமி தரிசனம்

பா.ஜனதாவினருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், நேற்று பெங்களூருவில் மைசூரு ரோட்டில் காளி ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வழிபட்டார்.

அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், 'விசுவாசமாக சேவையாற்றியது போல் மீண்டும் மக்கள் பணியாற்ற எனக்கு பலம் கொடுக்குமாறு வேண்டி கொண்டேன்' என்றார். விசுவ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள அமைப்பினர் நேற்று நாடு முழுவதும் ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com