

திருவனந்தபுரம்,
கேரளாவில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுகள் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடத்தி முடிக்கப்பட்டது. எஸ்.எஸ்.எல்.சி. செய்முறை தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், பிளஸ்-2 செய்முறை தேர்வு விரைவில் நடத்தப்பட உள்ளது. நடந்து முடிந்த தேர்வுகளின்விடைத்தாள் திருத்தும் பணி இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இந்த பணி வருகிற 24-ந் தேதி வரை நடைபெறும்.
கொரோனா ஊரடங்கு காரணமாக அரசு பஸ் போக்குவரத்து கடந்த மாதம் 5-ந் தேதி முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் விடைத்தாள் திருத்தும் பணிக்கு செல்லும் ஆசிரியர்கள், அலுவலர்களின் வசதிக்காக கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை மந்திரி ஆன்றனி ராஜு தெரிவித்துள்ளார்.
தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் பிளஸ்-2 தேர்வை ரத்து செய்த நிலையில், கேரள அரசு பிளஸ்-2 தேர்வை நடத்தி எந்தவொரு பிரச்சினையும் இன்றி வெற்றிகரமாக முடித்ததோடு விடைத்தாள் திருத்தும் பணிக்கு சென்று விட்டது குறிப்பிடத்தக்கது.