

திருவனந்தபுரம்,
தமிழகத்தின் குமரி மாவட்டம் மற்றும் கேரள கடலோர பகுதிகளை கடந்த 30ந் தேதி ஒகி புயல் கடுமையாக தாக்கியது. இந்த புயல் அந்த பகுதிகளில் பெருத்த சேதத்தை ஏற்படுத்தி விட்டது. மேலும் இந்த புயலில் சிக்கி பலர் உயிர் இழந்தனர்.
குறிப்பாக இந்த பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் மாயமாகினர். இதில் பலர் உயிருடன் மீட்கப்பட்டு வரும் நிலையில், சில மீனவர்களின் பிணங்களும் மீட்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நேற்று கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்துக்கு அருகே கடலில் அழுகிய நிலையில் மிதந்துகொண்டிருந்த 4 உடல்களை மீட்புபடையினர் மீட்டனர். இதேபோல், மலப்புரம் மற்றும் கொச்சி அருகே 2 உடல்கள் மீட்கப்பட்டன.
இதன் மூலம் கேரளாவில் ஒகி புயலில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்து உள்ளது.