இந்தியாவில் முதல்முறை: கருணைக்கொலைக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி

கருணைக் கொலைகளை அனுமதிக்கும் வகையில் கடந்த 2018-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு விரிவான தீர்ப்பை வழங்கியிருந்தாலும், அதன் அடிப்படையில் மரணத்தை அனுமதிக்கும் முதல் கோர்ட்டு உத்தரவாக இது அமைந்துள்ளது.
இந்தியாவில் முதல்முறை: கருணைக்கொலைக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி
Published on

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த ஹரிஷ் ராணா என்பவர் கடந்த 2013-ம் ஆண்டு தனது 20-வது வயதில் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். அவர் சண்டிகரில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்த போது அங்கு 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்தார்.சுயநினைவை இழந்த ஹரிஷ் ராணா கோமா நிலைக்கு சென்றார். அவருக்கு 13 ஆண்டுகளாக சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. தற்போது அவருக்கு 32 வயதாகிறது.

ஹரிஷின் வயதான பெற்றோர், தங்கள் மகனின் சிகிச்சைக்கு போதிய வசதி இல்லாமலும், அவர் அனுபவிக்கும் வேதனையை கண்டும் மனமுடைந்தனர். அதேவேளையில் ஹரிஷ் ராணா இனி குணமடைய மாட்டார் என மருத்துவர்கள் கூறிவிட்ட நிலையில், அவரை இப்படியே துன்பப்படுத்துவதில் அர்த்தமில்லை என்று நினைத்து, தனது மகனின் உடல்நிலையை முழுமையாக பரிசோதிக்க அனுமதிக்க வேண்டும் என கேட்டும், ஹரிஷை கருணைக் கொலை செய்ய அனுமதி கேட்டும் டெல்லி ஐகோர்ட்டை நாடினார்கள்.ஆனால் ஹரிஷ் ராணா வெளிப்புற மருத்துவ உபகரணங்கள் எதுவும் இல்லாமல் தொடர்ச்சியாக உயிரோடு இருப்பதை சுட்டிக்காட்டிய ஐகோர்ட்டு, அவரது பெற்றோரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். முதலில் அவர்களது கோரிக்கையை ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட்டு, மேற்கொண்டு ஏதேனும் உத்தரவு தேவைப்பட்டால் கோர்ட்டை நாடலாம் எனவும் அறிவுறுத்தி இருந்தது.இதனையடுத்து மீண்டும் ஹரிஷின் பெற்றோர், மகனுக்கு கருணை மரணம் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு விரிவாக விசாரித்தது. பின்னர் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.இந்த நிலையில் இன்று இந்த வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பு கூறினர். நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியதாவது:

அரசமைப்பு சட்டத்தின் 21-வது பிரிவின் கீழ், ‘கண்ணியத்துடன் வாழ்வது’ என்பது ‘கண்ணியமான மரணத்தையும்’ உள்ளடக்குகிறது. குணமாக வாய்ப்பே இல்லாத நிலையில் ஒருவரை செயற்கையாக உயிர்ப்புடன் வைத்திருப்பது அவரது கண்ணியத்தை பாதிக்கும்.டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களின் அறிக்கையின்படி, ஹரிஷ் மீண்டு வர வாய்ப்பே இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. எனவே, அவருக்கு வழங்கப்படும் செயற்கை உணவு மற்றும் நீர் போன்ற வாழ்வாதார உதவிகளை நிறுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த ஒரு மருத்துவ குழுவின் கண்காணிப்பில் இந்த வாழ்வாதார உதவிகளை திரும்ப பெறும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர். கருணைக் கொலைகளை அனுமதிக்கும் வகையில் கடந்த 2018-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு விரிவான தீர்ப்பை வழங்கியிருந்தாலும், அதன் அடிப்படையில் மரணத்தை அனுமதிக்கும் முதல் கோர்ட்டு உத்தரவாக இது அமைந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com