

சிங்ரவுலி,
இந்தியா முழுவதும் குழந்தை கடத்தல், பலாத்காரம் மற்றும் மதவாத மோதல்கள் தொடர்பாக வாட்ஸ்-அப்பில் பரவும் வதந்தியால் ஏற்படும் கும்பல் தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிரிழந்து வருகிறார்கள். போலிச் செய்திகளை நம்பி அப்பாவி மக்களை கொல்லும் துரதிஷ்டவசமான சம்பவம் தொடர்ந்து நடந்த வண்ணமே உள்ளது. இவ்விவகாரத்தில் மத்திய அரசின் எச்சரிக்கையை அடுத்து வாட்ஸ்-அப் நிறுவனம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே கும்பல் தாக்குதலில் உயிரிழப்பு என்ற துரதிஷ்டவசமான சம்பவம் தொடர்ந்து வருகிறது.
இப்போது மத்திய பிரதேசத்தில் குழந்தையை கடத்த வந்ததாக கருதி மனநலம் பாதிக்கப்பட்ட பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சிங்ரவுலி மாவட்டம் போஷ் கிராமத்தில் கடந்த 19ந் தேதி 25 வயது மதிக்கத்தக்க மனநிலை பெண் ஒருவரை கும்பல் ஒன்று தாக்கியுள்ளது. வாட்ஸ் அப்பில் குழந்தை கடத்தும் கும்பல் நடமாடுவதாக வதந்திகள் பரவியதை நம்பி, கும்பல் அந்த பெண்ணை கட்டை மற்றும் ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியுள்ளது. இதில் அந்த பெண் பரிதாபமாக இறந்தார். பின்னர் அவரது உடலை காட்டுப்பகுதியில் உள்ள சாக்கடையில் போட்டுவிட்டு சென்றுவிட்டனர். மறுநாள் பெண் பிணம் கிடந்ததை பார்த்த சிலர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி 12 பேரை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.