மூடிகெரே தாலுகாவில் கிராமங்களில் சுற்றித்திரியும் காட்டு யானைகளால் மக்கள் பீதி

மூடிகெரே தாலுகாவில் கிராமங்களில் சுற்றித்திரியும் காட்டு யானைகளால் மக்கள் பீதியில் உள்ளனர். அந்த யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மூடிகெரே தாலுகாவில் கிராமங்களில் சுற்றித்திரியும் காட்டு யானைகளால் மக்கள் பீதி
Published on

சிக்கமகளூரு;

சுற்றித்திரியும் காட்டு யானைகள்

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா பிதரஹள்ளி, பங்கேனஹள்ளி, ஜேனுபைலு உள்ளிட்ட கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி அமைத்துள்ளன. இதனால் அந்த வனப்பகுதியில் இருந்து இரைதேடி வனவிலங்குகளான காட்டுயானை, புலி, சிறுத்தை போன்றவை கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருவது வழக்கமான நடத்து வருகிறது.

மேலும் இவை விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதபடுத்தி உள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக 5-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் அந்த கிராமங்களுக்குள் புகுந்தன. அவை கிராமத்துக்குள் சுற்றித்திரிந்து வருகின்றன. மேலும் விளைநிலங்களிலும் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

பயிர்கள் நாசம்

இந்த நிலையில் நேற்று முன்தினமும் அந்த காட்டு யானைகள் கிராமங்களில் புகுந்து அட்டகாசம் செய்தன. இதனை அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் செல்போன்களில் வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். தற்போது அந்த வீடியோ வைரல் ஆகியுள்ளது.

மேலும் அந்த யானைகள் பிரதஹள்ளி கிராமத்தில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து அங்கு பயிரிட்டு இருந்த காபி, வாழை, ஏலக்காய் போன்ற பயிர்களை தும்பிக்கையால் முறித்தும், காலால் மிதித்தும் நாசப்படுத்தியது. இதனால் அந்த பகுதி மக்கள் அச்சமடைந்து தங்களின் வீடுகளை விட்டு வெளியே வராமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கோரிக்கை

இதுகுறித்து தகவல் அறிந்து மூடிகெரே வனத்துறை அதிகாரிகள் அந்த பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டனர். அங்கு வந்த வனத்துறையினரிடம் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து காட்டுயானைகளை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

காட்டு யானைகளின் நடமாட்டத்தால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com