

புதுடெல்லி,
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது கட்ட அமர்வு, தொடர் அமளியால் 5-ந் தேதி முதல் கடந்த 4 நாட்களாக ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் 5-வது நாளாக நேற்று மக்களவை கூடியது. அப்போது மக்களவைக்கு வந்த தென்கொரியா நாடாளுமன்ற குழுவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் வரவேற்றார். பின்னர் சமீபத்தில் இறந்த முன்னாள் எம்.பி.க்கள் 3 பேருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
சிறிது நேரத்தில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் வங்கி மோசடி தொடர்பாக அமளியில் ஈடுபட்டனர். மத்திய அரசில் இருந்து விலகிய தெலுங்கு தேசம் கட்சியினர் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரியும், இடஒதுக்கீட்டை அதிகரிக்க வலியுறுத்தி தெலுங்கானா ராஷ்டிர சமிதியினரும் வலியுறுத்தினர்.
காவிரி பிரச்சினை, பெரியார் சிலை விவகாரத்தை முன்வைத்து அ.தி.மு.க. எம்.பி.க்கள் கோஷமிட்டனர். தொடர் அமளியால் அவையை நாள் முழுவதும் சபாநாயகர் ஒத்திவைத்தார்.
மாநிலங்களவையிலும் அதே பிரச்சினையை காங்கிரஸ், அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவையை நாள் முழுவதும் துணைத்தலைவர் பி.ஜே.குரியன் ஒத்திவைத்தார். இந்த வாரம் தொடங்கி 5 நாட்களும் நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கியது.