

ஜெய்ப்பூர்,
ராஜஸ்தானில், பசு பாதுகாவலர்களால் தாக்கப்பட்ட வாலிபரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதில் போலீசார் தாமதம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபற்றி உயர்மட்ட குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் அக்பர் கான் (வயது 28). இவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு, ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் லாலாவண்டி கிராமத்தில் உள்ள வனப்பகுதி வழியாக 2 பசுக்களை தனது சொந்த ஊருக்கு கூட்டிச் சென்று கொண்டிருந்தார். அவருடைய நண்பர் அஸ்லம், உடன் சென்றார். அப்போது, பசு பாதுகாவலர்கள் அவர்களை சூழ்ந்து கொண்டனர். அஸ்லம் தப்பி ஓடினார். அக்பர் கானை அக்கும்பல் கடுமையாக தாக்கியது.
பின்னர், போலீசார் வந்து, அக்பர் கானை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அவரிடம் வாக்குமூலம் பெற்று விட்டு, அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால், சற்று நேரத்தில் அக்பர் கான் இறந்து விட்டார். இச்சம்பவம் தொடர்பாக, தர்மேந்திர யாதவ், பரம்ஜீத் சிங், நரேஷ் சிங் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த வழக்கு விசாரணை, ஜெய்ப்பூர் சரக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தாக்கப்பட்ட அக்பர்கானை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்வதில் போலீசார் தாமதம் செய்ததாகவும், அதனால்தான் அவர் இறந்து விட்டதாகவும் கூறப்பட்டது. அக்பர் கானை போலீசாரே அடித்து உதைத்ததாகவும் தகவல் வெளியானது. இதனால், இதுபற்றி விசாரிப்பதற்காக, 4 உயர் போலீஸ் அதிகாரிகள் அடங்கிய உயர்மட்ட குழுவை ராஜஸ்தான் காவல்துறை நேற்று அமைத்தது.
இதுகுறித்து போலீஸ் டி.ஜி.பி. ஓ.பி.கல்கோத்ரா கூறியதாவது:-
அக்பர்கானை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்வதில் போலீசார் தாமதம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவரை போலீசாரே அடித்ததாகவும் கூறப்படுகிறது. இவை பற்றி எல்லாம் உயர்மட்ட குழு விசாரிக்கும். தவறு கண்டறியப்பட்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, நாடாளுமன்ற மக்களவையில் நேற்று இப்பிரச்சினை எழுப்பப்பட்டது. கேள்வி நேரம் முடிந்தவுடன், காங்கிரஸ் எம்.பி. கரண்சிங் யாதவ் இப்பிரச்சினையை எழுப்பினார். பசு பாதுகாவலர்கள், இதன் பின்னணியில் இருப்பதாகவும், போலீசாரும் அக்பர் கானை தாக்கியதாகவும் அவர் குற்றம் சாட்டினார். அவரது பேச்சுக்கு பா.ஜனதா உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், ஆல்வார் சம்பவத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், கும்பலால் தாக்கப்பட்ட அக்பர் கானை 6 கி.மீ. தொலைவில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல போலீசார் 3 மணி நேரம் தாமதம் செய்துள்ளனர். வழியில், அவர்கள் தேநீர் இடைவேளை எடுத்துக் கொண்டதுதான் காரணம். இதுதான் மோடியின் கொடூரமான டிஜிட்டல் இந்தியா. இங்கு மனிதத்தன்மையை வெறுப்புணர்வு அபகரித்து விட்டது. மக்கள் நசுக்கப்பட்டு சாகவிடப் படுகிறார்கள் என்று அவர் கூறியுள்ளார்.