தமிழகத்தில் புதிய அனல்மின் நிலைய பணிகளை துரிதப்படுத்த வேண்டும் - மத்திய மந்திரியிடம் கோரிக்கை

தமிழகத்தில் நடந்து வரும் அனல்மின் நிலைய பணிகளை துரிதப்படுத்த மத்திய மந்திரியை சந்தித்து தமிழக மின்சாரத்துறை அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.
தமிழகத்தில் புதிய அனல்மின் நிலைய பணிகளை துரிதப்படுத்த வேண்டும் - மத்திய மந்திரியிடம் கோரிக்கை
Published on

புதுடெல்லி,

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயகுமார், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி ஆகியோர் டெல்லிக்கு நேற்று சென்றனர். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேசினர். பின்னர் நிலக்கரி சுரங்கங்கள் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி, சுற்றுச்சூழல்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர், புதுப்பிக்கவல்ல எரிசக்தி துறை இணை-மந்திரி (தனிபொறுப்பு) ஆர்.கே.சிங் ஆகியோர்களை சந்தித்தனர். அவர்களிடம், தமிழகத்தில் 24 மணிநேரமும் மின்சாரம் தொய்வின்றி வழங்குவதற்கு தேவையான நிலக்கரி வழங்குதல் மற்றும் சிறப்பு நிதி ஒதுக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்து வரும் எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம், நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் குந்தா நீரேற்று புனல் மின் திட்டம் ஆகியவற்றிற்கான பணிகள் தாமதமின்றி தொடர, இத்திட்டங்களுக்கான சுற்று சூழல் அனுமதியை விரைந்து புதுப்பித்து வழங்குமாறு மத்திய சுற்றுச்சூழல்துறை மந்திரியிடம் கோரிக்கை விடுத்தனர்.

தமிழக மின்நிலையங்களுக்கு இந்திய நிலக்கரி நிறுவனங்களிடமிருந்து நாளொன்றுக்கு 60 ஆயிரம் மெட்ரிக் டன்கள் (நாளொன்றுக்கு 16 நிலக்கரி வண்டிகள்) நடப்பாண்டு நவம்பர்- டிசம்பர் மாதங்களுக்கும் மற்றும் நாளொன்றுக்கு 71 ஆயிரம் மெட்ரிக் டன்கள் (நாளொன்றுக்கு 19 நிலக்கரி வண்டிகள்) ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கும் நிலக்கரி ஒப்பந்தத்தின்படி தொடர்ந்து வழங்க அறிவுறுத்தும்படி மத்திய நிலக்கரித்துறை மந்திரி பிரகலாத் ஜோஷியிடம் கோரிக்கை விடுத்தனர்.

வடசென்னை அனல்மின் திட்டம் நிலை-3, எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டலம், உப்பூர் அனல்மின் நிலையம் மற்றும் உடன்குடி அனல்மின் நிலையம் ஆகிய திட்டங்களின் முன்னேற்றங்களை துரிதப்படுத்தவதற்கு, பாரத மிகுமின் நிறுவனத்தை (பெல்) வலியுறுத்துமாறு மத்திய நிதி மந்திரியிடம், தமிழக அமைச்சர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com