2ஜி வழக்கில் கோர்ட்டு உத்தரவுப்படி 3 பேர் மரக்கன்றுகள் நட்டனர்

2ஜி மேல்முறையீட்டு வழக்கில் உரிய காலத்தில் பதில் தாக்கல் செய்யாத 3 பேர் கோர்ட்டு உத்தரவுப்படி மரக்கன்றுகள் நட்டனர்.
2ஜி வழக்கில் கோர்ட்டு உத்தரவுப்படி 3 பேர் மரக்கன்றுகள் நட்டனர்
Published on

புதுடெல்லி,

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக அப்போதைய தொலைதொடர்பு மந்திரி ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்பட பலர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் தனிக்கோர்ட்டு குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்தது.

இந்த விடுதலையை எதிர்த்து அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை நீதிபதி ஏ.கே.சாவ்லா விசாரணை நடத்திவருகிறார். இந்த வழக்கு விசாரணையின்போது அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுக்கு குற்றம்சாட்டப்பட்டவர்கள் உரிய பதில் அளிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

ஆனால் இதில் ஷாகித் பால்வா, ஆசிப் பால்வா, ராஜீவ் அகர்வால் ஆகியோர் உரிய காலத்தில் பதில் அளிக்க தவறினார்கள். இதைத்தொடர்ந்து அந்த 3 பேரும் டெல்லி தெற்கு முகடு வனப்பகுதியில் மரங்கள் நடவேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது 3 பேர் சார்பில் அவர்களது வக்கீல் விஜய் அகர்வால் ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.

அதில், அவர்கள் 3 பேரும் கோர்ட்டு உத்தரவுப்படி தனித்தனியாக தலா 1,500 மரக்கன்றுகள் நட்டிருப்பதாகவும், இதன்மூலம் டெல்லியில் தூய்மையான காற்றுக்கு தங்கள் பங்களிப்பை வழங்கியுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து நீதிபதி ஏ.கே.சாவ்லா, அந்த 3 பேரும் கோர்ட்டு உத்தரவுப்படி மரக்கன்றுகள் நட்டார்களா? என்பது குறித்து துணை வனப்பாதுகாவலர் பதில் அளிக்க உத்தரவிட்டார்.

பின்னர் நீதிபதி இந்த வழக்கை அமலாக்கத்துறை, சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மூல வழக்கின் விசாரணை நடைபெறும் அக்டோபர் 24-ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com