சுரங்க முறைகேடு வழக்கில் சிறை சென்றவர் - எடியூரப்பா வாழ்க்கை குறிப்பு

கர்நாடக முதல்-மந்திரியாக 4-வது முறையாக நேற்று பதவி ஏற்ற எடியூரப்பா, முன்பு சுரங்க முறைகேடு வழக்கில் சிறை சென்றவர் ஆவார்.
சுரங்க முறைகேடு வழக்கில் சிறை சென்றவர் - எடியூரப்பா வாழ்க்கை குறிப்பு
Published on

பெங்களூரு,

கர்நாடக முதல்-மந்திரியாக 4-வது முறையாக நேற்று பதவி ஏற்ற எடியூரப்பாவின் வாழ்க்கை குறிப்பு வருமாறு:-

கர்நாடக அரசின் சமூகநலத்துறையில் குமாஸ்தாவாக பணியாற்றிய எடியூரப்பா பின்னர் அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர்ந்தார். இந்தியாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட போது 45 நாட்கள் சிறை வாசம் அனுபவித்தார்.

முதல் முறையாக 1983-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் சிகாரிபுரா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார்.

2006-ம் ஆண்டு பாரதீய ஜனதா-ஜனதா தளம்(எஸ்) ஆட்சியில் துணை முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்ட அவர், 2007-ம் ஆண்டு செப்டம்பர் 12-ந் தேதி முதல் முறையாக முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். அப்போது 7 நாட்கள் மட்டுமே பதவியில் இருந்த அவர், ராஜினாமா செய்தார்.

2008-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற தேர்தலில் பாரதீய ஜனதா அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து எடியூரப்பா 2-வது முறையாக முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.

சுமார் 3 ஆண்டுகள் பதவியில் இருந்த பிறகு, 2011-ம் ஆண்டு அவர் மீது நில முறைகேடு, கனிம சுரங்க முறைகேடு குறித்து அடுக்கடுக்கான புகார் எழுந்தது. அப்போது லோக்அயுக்தா நீதிபதியாக இருந்த சந்தோஷ் ஹெக்டே, கனிம சுரங்க முறைகேடு குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

இதனால் பாரதீய ஜனதா மேலிடம் எடியூரப்பாவை பதவி விலகும்படி வற்புறுத்தியது. இதனால் அவர் பதவி விலகினார். இந்தநிலையில் எடியூரப்பா மீது ஊழல் வழக்கு தொடர அப்போது கவர்னராக இருந்த பரத்வாஜ் அனுமதி வழங்கினார். இதனால் வேறு வழி இல்லாமல் எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்தார். லோக் ஆயுக்தா கோர்ட்டில் எடியூரப்பா மீது வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த கோர்ட்டு, அவர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது.

லோக் ஆயுக்தா சிறப்பு கோர்ட்டு கைது வாரண்டு பிறப்பித்ததை தொடர்ந்து, எடியூரப்பா கோர்ட்டில் சரண் அடைந்தார். இதைத்தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு அவர் மீது தொடரப்பட்ட கனிம சுரங்க முறைகேடு, நில முறைகேடு வழக்கு களை கர்நாடக ஐகோர்ட்டு ரத்து செய்ததை தொடர்ந்து அவர் விடுதலையானார்.

பாரதீய ஜனதாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அக்கட்சியை விட்டு விலகி, கர்நாடக ஜனதா கட்சி என்ற பெயரில் தனி கட்சியை தொடங்கிய எடியூரப்பா பின்னர் அந்த கட்சியை 2014-ம் ஆண்டு பாரதீய ஜனதாவுடன் இணைத்தார்.

2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலையில், 104 இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜனதாவுக்கு ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார். அதை ஏற்று 2018-ம் ஆண்டு மே மாதம் 3-வது முறையாக முதல்-மந்திரியாக பதவி ஏற்ற எடியூரப்பா, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் 3-வது நாளில் பதவியை ராஜினாமா செய்தார்.

காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து இப்போது அவர் 4-வது முறையாக முதல்-மந்திரியாக பதவி ஏற்று இருக்கிறார்.

கர்நாடக பாரதீய ஜனதா தலைவராக இருந்து வரும் எடியூரப்பா ஏற்கனவே 3 முறை அந்த பதவியை வகித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com