

ஆமதாபாத்,
குஜராத் மாநிலத்தை நூற்றுக்கும் மேற்பட்ட கரசேவகர்கள் 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அயோத்திக்கு சென்றனர். பிறகு அவர்கள் அங்கிருந்து சபர்மதி எக்ஸ்பிரஸ் மூலம் பிப்ரவரி 27-ந்தேதி சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். ரெயில் குஜராத் மாநிலம் கோத்ரா ரெயில் நிலையம் வந்தபோது கரசேவகர்கள் முன்பதிவு செய்து பயணம் செய்த எஸ்-6 பெட்டி தீ வைத்து எரிக்கப்பட்டது.
இந்த கொடூர சம்பவத்தில் கரசேவர்கள் 59 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் வகுப்பு கலவரம் வெடித்தது. இதில் 1,200 பேர் உயிர் இழந்தனர்.
கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவம் தொடர்பாக விசாரிக்க நீதிபதி நானாவதி தலைமையில் சிறப்பு விசாரணை கமிஷனை மாநில அரசு அமைத்தது.
மேல்முறையீடு
இந்த வழக்கில் சிறப்பு விசாரணை கோர்ட்டு 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் 11 பேருக்கு தூக்குத் தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறியது. 63 பேரை வழக்கில் இருந்து விடுவித்தது. ரெயில் எரிப்பு சம்பவம் விபத்து அல்ல. ரெயில் பெட்டியை தீ வைத்து எரித்துள்ளனர் என்றும் கோர்ட்டு கூறியது.
தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரும், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 20 பேரும் குஜராத் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இதேபோல் சிறப்பு விசாரணைக் குழு சார்பில் 63 பேரை விடுதலை செய்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதிகள் ஆனந்த் எஸ்.தவே, ஜி.ஆர்.உத்வானி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்து வந்தது. மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில் நீதிபதிகள் நேற்று தங்களது தீர்ப்பை வழங்கினர்.
தண்டனை குறைப்பு
அப்போது, கீழ்கோர்ட்டு 11 பேருக்கு விதித்த தூக்குத் தண்டனையை கடுங்காவல் ஆயுள்தண்டனையாக குறைத்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். அதேநேரம் ஏற்கனவே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 20 பேரின் தண்டனையை குறைக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
நீதிபதிகள் தங்களது உத்தரவில், ரெயில் எரிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சத்தை ரெயில்வே நிர்வாகமும், மாநில அரசும் நஷ்ட ஈடாக வழங்கவேண்டும். ஊனம் அடைந்தவர்களுக்கு அவர்களின் ஊனத்துக்கு தக்கவாறு இழப்பீட்டுத் தொகையாக வழங்கவேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
மேலும் மாநில அரசு சட்டம் ஒழுங்கை சரியாக பராமரிக்க தவறியதே இந்த சம்பவத்துக்கு காரணம். இதேபோல் ரெயில்வே நிர்வாகமும் சரிவர செயல்படவில்லை என்றும் குறிப்பிட்டனர்.
வழக்கில் இருந்து 63 பேரை விடுவித்ததை எதிர்த்து சிறப்பு விசாரணைக் குழு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை குஜராத் ஐகோர்ட்டு ஏற்க மறுத்துவிட்டது.
அவமதிப்பு
குஜராத் ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து குஜராத் அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யவேண்டும் என்று விசுவ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா வலியுறுத்தினார்.
ராமரின் பக்தர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்றால் குஜராத் அரசு தீபாவளிக்குள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யவேண்டும். கோத்ராவில் இந்துக்களை எரித்தவர்களை ஏன் தூக்கில் தொங்கவிடக்கூடாது?... இது, ராமர் பக்தர்கள் செய்த உயிர் தியாகத்தை அவமதிப்பது போல் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.