கடும் அமளிக்கு மத்தியில் மக்களவையில் வாடகைத்தாய் ஒழுங்குமுறை மசோதா நிறைவேறியது

மக்களவையில் கடும் அமளிக்கு மத்தியில் வாடகைத்தாய் ஒழுங்குமுறை மசோதா நிறைவேறியது. இதன்படி, குழந்தை பெற்றுத்தர பணம் கொடுத்து ஒருவரை வாடகைத்தாயாக அமர்த்த முடியாது.
கடும் அமளிக்கு மத்தியில் மக்களவையில் வாடகைத்தாய் ஒழுங்குமுறை மசோதா நிறைவேறியது
Published on

புதுடெல்லி,

ரபேல் போர் விமான விவகாரம், மேகதாது அணை பிரச்சினை உள்ளிட்டவற்றில் நாடாளுமன்ற மக்களவையில் நேற்றும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.

இந்த அமளிக்கு மத்தியில் வாடகைத்தாய் ஒழுங்குமுறை மசோதா விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த விவாதத்தில் உறுப்பினர்கள் சுப்ரியா சுலே (தேசியவாத காங்கிரஸ்), பி.மகாதேவ் (பிஜூ ஜனதாதளம்), காக்கோலி கோஷ் தஸ்திதார் (திரிணாமுல் காங்கிரஸ்), நிஷிகந்த் துபே (பாரதீய ஜனதா), என்.கே.பிரேமசந்திரன் (புரட்சிகர சோஷலிஸ்டு கட்சி) ஆகியோர் பங்கேற்று தங்கள் கருத்துக்களை கூறினார்கள்.

விவாதத்துக்கு மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா பதில் அளித்துப்பேசினார். அப்போது அவர், அமளிக்கு மத்தியில் இந்த மசோதா மீது தரமான விவாதம் நடந்தது. இது உறுப்பினர்களின் அக்கறையை காட்டுகிறது. இந்த மசோதா பெண்கள் மற்றும் குழந்தைகளின் கண்ணியத்தை பாதுகாக்கிறது. வாடகைத்தாய் முறையை வியாபார ரீதியில் செய்துகொள்ள முடியாது. இந்த மசோதாவின் நோக்கம், குடும்பங்களை காப்பாற்றுவதுதான் என்று குறிப்பிட்டார்.

மேலும் வாடகைத்தாய்முறை செயல்களை ஒழுங்குபடுத்துவதற்காகத்தான் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே குழந்தை இல்லாத தம்பதியர் மருத்துவ விஞ்ஞானத்தை பயன்படுத்தி, குழந்தைப்பேற்றினை பெறலாம். இந்த மசோதாவில் 23 திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த மசோதாவில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் சேர்த்துக்கொள்ளப்படவில்லை என்று கூறினார்.

அதைத் தொடர்ந்து குரல் வாக்கெடுப்பின் மூலம் இந்த மசோதா நிறைவேறியது.

இந்த மசோதாவின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிற தம்பதியருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் முடிந்திருக்க வேண்டும். கணவன், மனைவி ஆகிய இருவரில் ஒருவர் மலட்டுத்தன்மை உள்ளவராக இருக்க வேண்டும்.

* குழந்தை பெற்றுத்தர வாடகைத்தாயாக அமர்த்தப்படுகிற பெண், கணவன்-மனைவி ஆகிய இருவரில் ஒருவரின் நெருங்கிய உறவினராக இருக்க வேண்டும். அவருக்கும் திருமணமாகி குழந்தை இருக்க வேண்டும்.

* வியாபார ரீதியில் பணம் கொடுத்து வாடகைத்தாயாக ஒருவரை அமர்த்தக்கூடாது. அதே நேரத்தில் மருத்துவ செலவுகள், காப்பீட்டு செலவு போன்றவற்றை தரலாம்.

* வாடகைத்தாய் அமர்த்தி குழந்தை பெற்றுக்கொள்ள தகுதி வாய்ந்த தம்பதியருக்கு சான்றிதழ் வழங்குவதற்கு உரிய அதிகாரிகளை மத்திய, மாநில அரசுகள் நியமிக்கும்.

இவ்வாறு மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com