கொரோனா பரவலுக்கு மத்தியில் 54 சதவீத பள்ளிகளில் ஆசிரியர்கள் நேரடியாக வந்து பாடம் நடத்துகின்றனர்: ஆய்வில் தகவல்

உலகமெங்கும் கொரோனா பரவலுக்கு மத்தியில் 54 சதவீத பள்ளிகளில் ஆசிரியர்கள் நேரில் வந்து பாடம் நடத்துகின்றனர் என ஆய்வு தகவல்கள் வெளியாகி உள்ளன.
கொரோனா பரவலுக்கு மத்தியில் 54 சதவீத பள்ளிகளில் ஆசிரியர்கள் நேரடியாக வந்து பாடம் நடத்துகின்றனர்: ஆய்வில் தகவல்
Published on

பள்ளிகளை திறக்க பரிந்துரை

கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலைத் தடுப்பதற்காக கடந்த ஆண்டு உலகமெங்கும் 188 நாடுகளில் பள்ளிகள் மூடப்பட்டன. இதனால் 160 கோடி குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.

இப்போது உலகமெங்கும் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்த நிலையில் பள்ளிகளை திறக்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கிறது. பள்ளிகளை மூடுவது என்பது கடைசி வாய்ப்பாகத்தான் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பும் கூறுகிறது. பள்ளி குழந்தைகள் மத்தியில் கொரோனா பரவலுக்கு வாய்ப்பு மிகவும் குறைவு என்பதால், அதிலும் குறிப்பாக 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா பரவுகிற வாய்ப்பு குறைவு என்பதால், தடுப்பூசிக்கு காத்திருக்காமல் பள்ளிகளை திறக்கலாம் என்று உலக வங்கி பரிந்துரைத்துள்ளது.

54 சதவீத பள்ளிகளில் ஆசிரியர்கள்...

பள்ளிகள் திறப்பு குறித்து ஆராய்வதற்காக உலகளாவிய கல்வி மீட்பு டிராக்கர் என்ற அமைப்பை உலக வங்கி, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், யுனிசெப் ஆகியவை கூட்டாக உருவாக்கி உள்ளன. இது, பள்ளிகளை திறப்பது தொடர்பாக உலக நாடுகளுக்கு உதவும். இந்த அமைப்பு பள்ளிகள் திறப்பு தொடர்பாக ஆராய்ந்து புள்ளி விவரங்களுடன் கூடிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* உலகமெங்கும் 80 சதவீத பள்ளிகள் வழக்கம்போல இயங்குகின்றன. அவற்றில் 54 சதவீத பள்ளிகளில், வழக்கம்போல ஆசிரியர்கள் நேரடியாக வந்து வகுப்புகளை நடத்துகின்றனர். 34 சதவீத பள்ளிகள் உயர் தொழில்நுட்ப முறையில் வகுப்புகளை நடத்துகின்றன. 10 சதவீதம் பள்ளிக்கூடங்கள் தொலைவிட கல்வியாக நடத்துகின்றன. 2 சதவீத பள்ளிக்கூடங்கள் எந்த முறையிலும் வகுப்புகளை நடத்தவில்லை.

* 53 சதவீத நாடுகளில் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை செலுத்தப்படுகிறது. ஆனாலும் பள்ளி ஆசிரியர்களும், இதர பணியாளர்களும் முழுமையாக தடுப்பூசி போடுகிற வரை காத்திருக்காமல் பள்ளிகளை திறக்கலாம் என்பதுதான் உலக வங்கியின் பரிந்துரையாக உள்ளது. போதுமான பாதுகாப்பு அம்சங்களுடன் பள்ளிகளை திறந்து விடலாம் என்றுதான் உலக வங்கி கூறுகிறது.

தொற்று பரவல் அதிகரிக்கவில்லை

* பள்ளிகளை திறப்பதற்கு முன்பாக 1 லட்சம் பேருக்கு 36 முதல் 44 பேரை கொரோனா பாதித்து ஆஸ்பத்திரிகளில் சேர்த்துள்ள நாடுகளில்கூட, பள்ளிகள் திறப்பால் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கவில்லை.

* பள்ளிகள் திறப்பதற்கு முன்பாக அதிக எண்ணிக்கையிலானவர்கள் கொரோனா பாதிப்பால் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்படுகிற நிலையில் இருந்த நாடுகளில் பள்ளிகள் திறந்த பின்னர் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதா என்பது பற்றிய ஆய்வு முடிவு வரவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com