பொதுமக்கள் நலன்கருதி பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க வேண்டும் - மத்திய அரசுக்கு, ராஜஸ்தான் முதல்-மந்திரி வலியுறுத்தல்

பெட்ரோல் மீது ரூ.32.90. டீசல் மீது ரூ.31.80 உற்பத்தி வரி விதிப்பதை, சாதாரண மக்கள் நலனை கருத்தில் கொண்டு, மத்திய அரசு உடனடியாக குறைக்க வேண்டும் என்று ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் வலியுறுத்தி உள்ளார்.
பொதுமக்கள் நலன்கருதி பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க வேண்டும் - மத்திய அரசுக்கு, ராஜஸ்தான் முதல்-மந்திரி வலியுறுத்தல்
Published on

ஜெய்ப்பூர்,

நாடு முழுவதும் தொடர்ந்து 11-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இதனால் சாதாரண மக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதற்கு காரணம் மத்திய அரசின் தவறான கொள்கைகள்தான் என்று ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் (காங்கிரஸ்) சாடி உள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று டுவிட்டரில் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டார். அவற்றில் அவர் கூறி இருப்பதாவது:-

மத்தியில் ஆளும் மோடி அரசு ஒரு லிட்டர் பெட்ரோல் மீது ரூ.32.90-ம், ஒரு லிட்டர் டீசல் மீது ரூ.31.80-ம் உற்பத்தி வரியாக விதிக்கிறது. 2014-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இருந்தபோது, பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.9.20-ம், டீசல் மீது ரூ.3.46 மட்டுமே உற்பத்தி வரியாக விதிக்கப்பட்டது.

பொதுமக்களின் நலன்களையொட்டி மோடி அரசு உடனடியாக பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். கடந்த 11 நாட்களாக இவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்திருக்கிறது. மோடி அரசின் தவறான கொள்கைகளின் விளைவுதான் இது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது நிலவிய விலையில் பாதி விலைக்குத்தான் இப்போது கச்சா எண்ணெய் சர்வதேச சந்தையில் விற்பனை ஆகிறது. ஆனால் பெட்ரோல், டீசல் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

மாநிலங்களின் அடிப்படை உற்பத்தி வரியில் ஒரு பகுதியை மத்திய அரசு தொடர்ந்து குறைத்து வருகிறது. அதே நேரத்தில் தனது கஜானாவை நிரப்புவதற்கு மத்திய பங்கின் மீதான கூடுதல் உற்பத்தி வரி மற்றும் சிறப்பு உற்பத்தி வரியை அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக மாநில அரசுகள் தங்களது பொருளாதார வளங்களுக்காக மதிப்பு கூட்டு வரியை உயர்த்த வேண்டியது வருகிறது.

கொரோனா வைரசால் ராஜஸ்தானின் பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் வருவாய் குறைந்து விட்டது. ஆனால் சாதாரண மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பதற்காக மாநில அரசு கடந்த மாதம் மதிப்பு கூட்டு வரியை 2 சதவீதம் குறைத்தது. இப்படி நிவாரணம் வழங்குவதற்கு பதிலாக, மோடி அரசு பெட்ரோல், டீசல் மீதான விலைகளை தினமும் உயர்த்தி வருகிறது.

அதே நேரத்தில் ராஜஸ்தான் மாநில அரசு, பெட்ரோல் மீது மிக அதிகளவில் வரி போடுவதாகவும், இதனால் அதன் விலை அதிகமாக இருப்பதாகவும் சிலர் வதந்திகளை பரப்புகிறார்கள். ராஜஸ்தானை விட பா.ஜ.க. ஆளும் மத்திய பிரதேசத்தில் பெட்ரோல் மீது கூடுதல் வரி விதிக்கப்படுகிறது. எனவே போபாலை விட ஜெய்ப்பூரில் பெட்ரோல் விலை அதிகம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com