ரெயில்வே பாதுகாப்பு படையில் 4,500 பெண் போலீசார் நியமனம் பியூஸ் கோயல் தகவல்

ரெயில்வே பாதுகாப்பு படையில் 4,500 பெண் போலீசார் நியமிக்கப்படுவதாக ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் மாநிலங்களவையில் தெரிவித்தார்.
ரெயில்வே பாதுகாப்பு படையில் 4,500 பெண் போலீசார் நியமனம் பியூஸ் கோயல் தகவல்
Published on

புதுடெல்லி,

ரெயில்வே பாதுகாப்பு படையில் பெண் போலீசார் நியமனம் குறித்த கேள்விகளுக்கு மாநிலங்களவையில் நேற்று ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ரெயில்வே பாதுகாப்பு படையில் தற்போது பெண் காவலர்களின் எண்ணிக்கை வெறும் 2.5 சதவீதமாகவே உள்ளது. ஒட்டுமொத்த ரெயில்வேயிலும் பெண் போலீசாரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், பெண் போலீசாரின் நியமனத்துக்கு பிரதமர் மோடி ஒப்புதல் வழங்கி உள்ளார்.

அதன்படி தற்போது ரெயில்வே பாதுகாப்பு படையில் 9 ஆயிரம் போலீசார் பணி நியமனம் செய்யப்படுகின்றனர். இதில் 50 சதவீதம், அதாவது 4,500 பணியிடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

ரெயில்வேயில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பை பொறுத்தவரை, அது மாநில அரசின் பணியாகும். ரெயில்வே உள்கட்டமைப்பு பாதுகாப்பு தொடர்பான பணிகளை மட்டுமே ரெயில்வே பாதுகாப்பு படையினர் செய்து வருகின்றனர்.

எனினும் கடந்த 2 ஆண்டுகளாக ரெயில்வே போலீசாருடன் இணைந்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் செயல்பட்டு வருகின்றனர். இதன் மூலம் பெண்கள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் கடத்தலை தடுத்தல் போன்ற துறைகளில் சிறப்பான சேவை வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பியூஸ் கோயல் கூறினார்.

பின்னர் அவர் எழுத்து மூலம் அளித்த மற்றொரு பதிலில், ரெயில்வே பாதுகாப்பு படையில் 8,619 கான்ஸ்டபிள்கள், 1120 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணி நியமனம் கடந்த 2018-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. இதில் 4,216 கான்ஸ்டபிள்கள் மற்றும் 201 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டு உள்ளன என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்று கூறிய பியூஸ் கோயல், இதன் மூலம் ரெயில்வே பாதுகாப்பு படையில் பெண் காவலர்கள் மற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.

முன்னதாக, பீகாரில் அரசு பணிகளில் 35 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு இருப்பது போல, ரெயில்வே துறையிலும் அந்த இடஒதுக்கீடு பின்பற்றப்படுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த பியூஸ் கோயல், மத்திய அளவில் இந்த இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்பதால், அது குறித்து பரிசீலிக்கப்படவில்லை என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com