

புதுடெல்லி,
சமூக வலைத்தளங்களில் எப்போது, எது டிரெண்ட் ஆகும் என யாரும் எளிதில் கணித்து விட முடியாது. அப்படித்தான் இப்போது சற்றும் எதிர்பாராத வகையில் எதுவும் டிரெண்ட் ஆகி பரபரப்பை ஏற்படுத்தி விடுவதை பார்க்க முடிகிறது.
அவ்வளவு ஏன், பிரண்ட்ஸ் திரைப்படத்தில் நேசமணி பாத்திரத்தில் நடித்த நடிகர் வடிவேலுவின் தலையில் சுத்தியல் விழுந்த காட்சி அண்மையில் டிரெண்ட் ஆகி சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை யாரும் மறந்து விடமுடியாது.
அந்த வகையில் இப்போது பிரபலங்கள் தொடங்கி அனைத்து தரப்பு பெண்களும் சேலை அணிந்து, படம் பிடித்து அதை டுவிட்டரில் Saree Twitter என்ற ஹேஸ்டேக்கில் பதிவேற்றம் செய்து அசத்தி வருகின்றனர்.
அட, என்னதான் பெண்களுக்கு நவீன உடைகள் வந்தாலும், சேலைக்கு ஈடு இணை எதுவும் இல்லை என்று சொல்ல வைக்கின்றன இந்தப் படங்கள். சேலையில்தான் பெண்கள் இத்தனை நளினமாக தோன்ற முடியும் என்றும் இந்தப் படங்கள் பாராட்டு பத்திரம் வாசிக்க வைக்கின்றன.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக மாறியுள்ள நடிகை நக்மா, சிவசேனா கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான பிரியங்கா சதுர்வேதி, டெல்லி பா.ஜனதா செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா இப்படி பலரும் இந்த ஹேஸ்டேக்கில் இணைந்துள்ளனர்.
இவர்களின் வரிசையில் சற்றும் எதிர்பாராத வகையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் சேர்ந்துள்ளார்.
22 ஆண்டுகளுக்கு முன்னர் தனது திருமண விழாவின்போது பனாரஸ் சேலையில் பளிச்சென தோன்றிய படத்தை பிரியங்கா பதிவேற்றம் செய்து இருக்கிறார். அவருக்கு லைக்குகளும், வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன என்பதை சொல்லத்தேவையில்லைதானே?
இளைஞர் காங்கிரஸ் சார்பில் போடப்பட்டுள்ள வாழ்த்து, எவ்வளவு அழகாக இருக்கிறீர்கள் பிரியங்கா! உங்கள் சாந்தமும், அழகும் உங்கள் செயல்களிலும் பிரகாசிக்கிறது என்று சொல்வது உச்சம்.