தமிழ் பத்திரிகைகளில் நம்பகத்தன்மையில் ‘தினத்தந்தி’க்கு முதல் இடம் - ஆய்வு அறிக்கையில் தகவல்

தமிழ் பத்திரிகைகளில் நம்பகத்தன்மையில் ‘தினத்தந்தி’க்கு மக்கள் முதல் இடம் வழங்கி இருப்பது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
தமிழ் பத்திரிகைகளில் நம்பகத்தன்மையில் ‘தினத்தந்தி’க்கு முதல் இடம் - ஆய்வு அறிக்கையில் தகவல்
Published on

மும்பை,

டி.ஆர்.ஏ. (டிரஸ்ட் ரிசர்ச் அட்வைசரி) என்ற நிறுவனம், வணிக முத்திரையுடன் (பிராண்ட்) கூடிய பல்வேறு வகையான நுகர்வோர் பொருட்களின் மீது வாடிக்கையாளர்கள் வைத்து இருக்கும் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு செய்து அதுபற்றிய அறிக்கையை வெளியிட்டு வருகிறது. அதாவது குறிப்பிட்ட பொருட்களின் வணிக முத்திரை மீது மக்கள் எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள் என்பது இந்த ஆய்வின் மூலம் தெரிய வருகிறது.

டி.ஆர்.ஏ. நிறுவனம் தனது 9-வது கள ஆய்வை 2018-ம் ஆண்டு டிசம்பர் முதல் கடந்த மார்ச் மாதம் வரை மேற்கொண்டது.

இந்த காலகட்டத்தில் அந்த நிறுவனத்தைச் சேர்ந்த 450-க்கும் அதிகமானோர் இந்தியா முழுவதும் 16 நகரங்களில் 2,315 பேரிடம் 400-க்கும் அதிகமான கேள்விகளை கேட்டு, அவர்கள் எந்த வணிக முத்திரையுடன் கூடிய பொருட்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள் என்பது பற்றிய விவரங்களை சேகரித்து இருக்கிறார்கள்.

21 முதல் 50 வயது வரையிலான மாத சம்பளம் பெறுவோரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வுக்காக கேள்விகள் கேட்கப்பட்டவர்களில் ஆண்கள் 80 சதவீதம் பேர்; பெண்கள் 20 சதவீதம் பேர் ஆவார்கள்.

நீங்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கும் சோப்பு, பற்பசை, ஆயத்த ஆடை, குளிர் பானம், லேப்டாப், தொலைக் காட்சி பெட்டி, செல்போன் போன்றநுகர்வோர் பொருட்கள் மட்டும் இன்றி, சேவை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் பத்திரிகைகள், தொலைக்காட்சி செய்தி சேனல்கள் போன்றவை எவை? என்பது குறித்தும் ஆய்வில் கலந்து கொண்டவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அவர்களிடம் இருந்து பதில்கள் பெறப்பட்டன.

அந்த வகையில் பத்திரிகைகள் தொடர்பான ஆய்வில், இந்திய அளவில் நம்பகத்தன்மை மிகுந்த பத்திரிகைகள் வரிசையில் 12 பத்திரிகைகள் இடம்பெற்று உள்ளன.

இதில் முதல் இரு இடங்களிலும் முறையே டைம்ஸ் ஆப் இந்தியா, இந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில பத்திரிகைகளும், 3-வது இடத்தில் இந்துஸ்தான் என்ற இந்தி பத்திரிகையும், 4-வது இடத்தில் தி இந்து ஆங்கில பத்திரிகையும், 5-வது இடத்தில் லோக் சக்தா என்ற மராத்தி மொழி பத்திரிகையும், 6-வது இடத்தில் நவபாரத் டைம்ஸ் என்ற இந்தி பத்திரிகையும், 7-வது இடத்தில் பெமினா இதழும் உள்ளன.

அனைத்து மொழிகளையும் உள்ளடக்கிய இந்த ஆய்வில் தினத்தந்திக்கு 8-வது இடம் கிடைத்து இருக்கிறது. அதே சமயம், தமிழில் தினத்தந்திக்கு முதல் இடம் கிடைத்து இருக்கிறது. தினத்தந்தி தவிர வேறு எந்த தமிழ் பத்திரிகையும் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

தி இக்கனாமிக் டைம்ஸ் ஆங்கில பத்திரிகைக்கு 9-வது இடமும், டி.என்.ஏ. ஆங்கில பத்திரிகைக்கு 10-வது இடமும், ஹிதாவடா என்ற ஆங்கில பத்திரிகைக்கு 11-வது இடமும், மகாராஷ்டிரா டைம்ஸ் என்ற மராத்தி மொழி பத்திரிகைக்கு 12-வது இடமும் கிடைத்து இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com