உத்தரபிரதேசத்தில் 9 வயது சிறுமி கூட தனியாக பள்ளி செல்ல முடியவில்லை - பிரியங்கா குற்றச்சாட்டு

உத்தரபிரதேசத்தில் நிலைமை பயங்கரமாக இருப்பதாகவும், 9 வயது சிறுமிகூட தனியாக பள்ளிக்கு செல்ல முடியவில்லை என்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா குற்றம் சாட்டினார்.
உத்தரபிரதேசத்தில் 9 வயது சிறுமி கூட தனியாக பள்ளி செல்ல முடியவில்லை - பிரியங்கா குற்றச்சாட்டு
Published on

உன்னாவ்,

உத்தரபிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கும்பலால் கற்பழிக்கப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த அவர்கள் கடந்த 5-ந் தேதி அந்த இளம்பெண்ணை உயிரோடு தீ வைத்து எரித்தனர்.

டெல்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த இளம்பெண் நேற்று முன்தினம் நள்ளிரவு உயிரிழந்தார். இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் மிகப்பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தை அறிந்ததும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா நேற்று உன்னாவின் படான் கெரா கிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு நேரில் சென்றார். அங்கு இளம்பெண்ணின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்த அவர், இந்த பிரச்சினையில் சட்ட போராட்டத்துக்கு உதவுவதாகவும், இளம்பெண்ணின் கொடூர மரணத்துக்கு நீதியை பெற்றுத்தருவோம் எனவும் உறுதியளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா, மாநில அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

உத்தரபிரதேசத்தில் சமூக விரோதிகளுக்கு இடமில்லை எனவும், குற்றவாளிகள் இல்லா மாநிலமாக உத்தரபிரதேசம் உருவாகி இருப்பதாகவும் மாநில அரசு கூறி வருகிறது. ஆனால் உண்மை என்னவென்றால் பெண்களுக்குத்தான் உத்தரபிரதேசத்தில் இடமில்லை. 9 வயது சிறுமி கூட தனியாக பள்ளிக்கு செல்ல முடியவில்லை.

மாநிலம் முழுவதும் சமூக விரோதிகள் சுதந்திரமாக சுற்றி வருகின்றனர். போலீசை பார்த்து அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. உத்தரபிரதேச நிலைமை பயங்கரமாக மாறி இருக்கிறது.

தற்போது கொல்லப்பட்டுள்ள இளம்பெண்ணின் குடும்பத்தினர் கடந்த ஒரு ஆண்டாகவே நீதிகேட்டு போராடி வந்தனர். அவரை கற்பழித்த குற்றவாளிகள், அவரது தந்தையை தாக்கியுள்ளனர், அவரையும், குழந்தைகளையும் மிரட்டியுள்ளனர், அவர்களது பயிர்களை எரித்துள்ளனர்.

ஆனால் இந்த சம்பவங்கள் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் உண்மையாக செயல்பட்டிருந்தால், இதுபோன்ற ஒரு கொடூர சம்பவம் நடந்திருக்காது. இவ்வாறு பிரியங்கா கூறினார்.

முன்னதாக தனது டுவிட்டர் தளத்தில், உன்னாவ் சம்பவத்துக்கு ஒரு சமூக மட்ட அடிப்படையில் நாம் அனைவருமே குற்றவாளிகள். அதேநேரம் மாநில அரசின் வெற்று சட்டம்-ஒழுங்கு நடைமுறையையும் இது சுட்டிக்காட்டுகிறது என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில் உன்னாவில் கற்பழிக்கப்பட்ட இளம்பெண் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று மாநில சட்டசபை முன் தர்ணாவில் ஈடுபட்டார். இதில் கட்சியின் மாநில தலைவர் நரேஷ் உத்தம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதைப்போல உன்னாவ் சம்பவத்துக்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி தனது டுவிட்டர் தளத்தில், சோகம். உன்னாவில் கொடூரங்களுக்கு எல்லையே இல்லை என்று கூறியிருந்தார்.

இதைப்போல உன்னாவ் சம்பவத்தை கண்டித்து லக்னோவில் உள்ள பா.ஜனதா அலுவலகம் முன் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். அவர்கள் மீதும் போலீசார் தடியடி நடத்தினர்.

இளம்பெண் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு

உன்னாவில் எரித்துக்கொல்லப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்துக்கு மாநில அரசு சார்பில் ரூ.25 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக மாநில மந்திரி சுவாமி பிரசாத் மவுரியா கூறும்போது, உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்து உள்ள முதல்-மந்திரி, அவர்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடும் அறிவித்து உள்ளார். அத்துடன் அரசு வீடு ஒன்றும் அவர்களுக்கு வழங்கப்படும். இந்த குற்ற செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக விரைவு கோர்ட்டு ஒன்றும் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதைப்போல உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்துக்கு தேவையான பிற உதவிகளும் உள்ளூர் அதிகாரிகள் மூலம் செய்து கொடுக்கப்படும் என மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் அவனிஷ் அஸ்வதி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com