சிறுமியை கொடூரமாக தாக்கிய சம்பவம் - காப்பகத்தில் இருந்து சிறுவன் விடுவிப்பு

காப்பகத்தில் தொடர்ந்து வைத்திருந்தால் சிறுவனின் மனநலம் பாதிக்கப்படலாம் என சிறுவனின் தந்தை தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
சிறுமியை கொடூரமாக தாக்கிய சம்பவம் - காப்பகத்தில் இருந்து சிறுவன் விடுவிப்பு
Published on: 

சண்டிகர்,

சிறுவனுக்கு தொடர்ந்து மனநல ஆலோசனைகள் வழங்கி, அவனது குணாதிசயத்தில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்துவோம் என பெற்றோர் உறுதியளித்ததை ஏற்றுக்கொண்டு சிறுவனை விடுதலை செய்ய சிறார் நீதி வாரியம் உத்தரவிட்டுள்ளது.

சிறுமி மீது தாக்குதல்

அரியானா மாநிலம் சண்டிகரின் பஞ்ச்குலா பகுதியில் உள்ள பள்ளியைச் சேர்ந்த 6 வயது சிறுமியை அதே பள்ளியில் படித்து வரும் 8 வயதான சிறுவன் பள்ளி வகுப்பறையில் வைத்து கொடூரமாக தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சஸ்பெண்ட்

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரி துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டார். இந்த விசாரணையின் அடிப்படையில் சிம்ரன்ஜித் கவுர் மற்றும் பூஜா ராணி ஆகிய 2 பயிற்சி ஆசிரியர்களை சஸ்பெண்ட செய்து மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவிட்டார்.

விடுதலை

இதனிடையே, சம்பந்தப்பட்ட சிறுவனை சிறார் காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய சிறார் நீதி வாரியம், சிறுமியை கொடூரமாக தாக்கிய சிறுவனை காப்பகத்தில் இருந்து விடுதலை செய்துள்ளது.

வீடியோ கேம்-வன்முறை

இது குறித்து சிறுவனின் தந்தை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மன்பீர் சிங் ரத்தி கூறுகையில், “சிறுவனிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது அவன் செல்போனில் மூர்க்கமான, வன்முறை நிறைந்த வீடியோ கேம்களை விளையாடியதாக தெரிவித்தான். சிறுவர்களுக்கு வீடியோ கேம் உலகத்திற்கும், நிஜ உலகத்திற்குமான வித்தியாசம் தெரியாது.

வீடியோ கேமில் வரும் கதாபாத்திரங்களுக்கு வலி தெரியாது. அதனால் குழந்தைகள் அந்த கதாபாத்திரங்களை கொடூரமாக தாக்கி அதனை விளையாட்டாக கருதி விடுகின்றனர். நாளடைவில் அதுவே அவர்களின் குணாதிசயமாக மாறிவிடுகிறது.

மனநலம் பாதிக்கப்படலாம்

இந்த வழக்கில் சிறுவனுக்கு இதற்கு முன்பு குற்றப்பதிவு(Criminal Record) எதுவும் இல்லை. மேலும், காப்பகத்தில் தொடர்ந்து வைத்திருந்தால் சிறுவனின் மனநலம் பாதிக்கப்படலாம். அதோடு, சிறுவனின் கல்வியும் பாதிக்கப்படும். எனவே, சிறுவனை காப்பகத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம்.

சிறுவனுக்கு தொடர்ந்து மனநல ஆலோசனைகள் வழங்கி, அவனது குணாதிசயத்தில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்துவோம் என அவனது பெற்றோர் உறுதியளித்தனர். இதனை ஏற்றுக்கொண்டு சிறுவனை விடுதலை செய்ய சிறார் நீதி வாரியம் உத்தரவிட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

வீடியோக்களை நீக்க உத்தரவு

மேலும், சமூக வலைதளங்களில் சிறுமியை சிறுவன் தாக்கும் காட்சிகள் வைரலாக பரவிய நிலையில், அந்த வீடியோ காட்சிகள் சிறுவனின் அடையாளத்தை காட்டும் வகையில் இருப்பதால் அவற்றை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சிறார் நீதி வாரியம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X