வருமான வரித்துறை நோட்டீஸ் விவகாரம்: ராகுல் காந்தி கேட்டபடி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க கோர்ட்டு மறுப்பு

வருமான வரித்துறை நோட்டீஸ் விவகாரத்தில் ராகுல் காந்தி கேட்டபடி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க டெல்லி ஐகோர்ட்டு மறுத்து விட்டது.
வருமான வரித்துறை நோட்டீஸ் விவகாரம்: ராகுல் காந்தி கேட்டபடி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க கோர்ட்டு மறுப்பு
Published on

புதுடெல்லி,

சுதந்திர போராட்ட காலத்தில் ஜவகர்லால் நேருவால் தொடங்கப்பட்டது, நேஷனல் ஹெரால்டு பத்திரிகை. 2008-ம் ஆண்டு இந்த பத்திரிகை நிறுத்தப்பட்டு விட்டது.

ஆனால் இதன் கோடிக்கணக்கான சொத்துக்களை அபகரிப்பதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியும், அவரது மகன் ராகுல் காந்தியும் யெங் இந்தியா என்ற நிறுவனத்தை 2010-ம் ஆண்டு தொடங்கி அதன் மூலம் அந்தப் பத்திரிகையை வாங்கியதாக பா.ஜனதா கட்சி மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி புகார் கூறி, டெல்லி கோர்ட்டில் ஒரு வழக்கு தொடுத்து உள்ளார்.

ஆனால் 2011-12-ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்தபோது, ராகுல் காந்தி தான் யெங் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் என்பதை மறைத்து விட்டார்; அதை சொல்லி இருந்தால் அவரது வருமானம் ரூ.68 லட்சம் அல்ல; ரூ.154 கோடி என வருமான வரித்துறை கருதுகிறது.

யெங் இந்தியா நிறுவனம் ரூ.249.15 கோடி வரி செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. மேலும் ராகுல் காந்தியின் 2011-12 ஆண்டு வருமான வரி கணக்கு விவகாரத்தை விசாரிக்க வருமான வரித்துறை நோட்டீஸ் பிறப்பித்தது. இந்த நோட்டீசுக்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் ராகுல் காந்தி ஒரு வழக்கு போட்டு உள்ளார். அந்த வழக்கு நீதிபதிகள் ரவீந்திர பட், ஏ.கே. சாவ்லா ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

இது தொடர்பான ஒரு வழக்கு வருமான வரி தீர்ப்பாயம் முன்பு 9-ந் தேதி (இன்று) விசாரணைக்கு வர இருப்பதால், வருமான வரித்துறை நோட்டீஸ் விவகாரத்தில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்; வருமான வரித்துறை நிர்ப்பந்திக்கும் நடவடிக்கை எதையும் எடுத்து விடாமல் நிவாரணம் வழங்க வேண்டும் என ராகுல் காந்தி சார்பில் வாதிடப்பட்டது.

ஆனால் அதற்கு வருமான வரித்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதே நேரத்தில் இந்த வழக்கில் அடுத்த விசாரணை வரையில் ராகுல் காந்தி மீது நிர்ப்பந்திக்கும் நடவடிக்கை எடுக்கப்படாது என அவர் உறுதி அளித்தார். அதைத் தொடர்ந்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர்.

மேலும் இந்த வழக்கு விசாரணை பற்றிய செய்திகளை வெளியிட ஊடகங்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் ராகுல் காந்தி சார்பில் வாய்மொழியாக வலியுறுத்தப்பட்டது. அதையும் ஏற்க நீதிபதிகள் மறுத்து விட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com