

புதுச்சேரி,
புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் பாரம்பரிய சுற்றுலா வளாக வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று காலை ஆய்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. எனவே மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நாம் இன்னும் கொரோனா தொற்றில் இருந்து வெளியே வரவில்லை. கொரோனா நம்மை விட்டு விலகவில்லை. எனவே அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
தடுப்பூசி போடுவதால் முற்றிலும் கொரோனா வராது என்று சொல்ல முடியாது. அவ்வாறு வந்தால் அதன் வீரியம் குறைவாக இருக்கும். எனவே தான் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்துகிறோம்.
கொரோனா குறித்து மக்கள் பயப்பட வேண்டாம். நிச்சயமாக கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்படும். மக்கள் பாதுகாப்பாக இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.