

இதுகுறித்து கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் சிக்பள்ளாப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
முன்எச்சரிக்கை நடவடிக்கைகள்
மராட்டிய மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. அதனால் அங்கு சில பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் கர்நாடகத்தில் மராட்டிய நிலை ஏற்படவில்லை. மாநிலத்தில் கொரோனா கட்டுக்குள் உள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மராட்டியத்தில் கடந்த 15 நாட்களாக கொரோனா அதிகரித்து வருகிறது.
ஆனால் கர்நாடகத்தில் கடந்த 2 நாட்களாக தான் 700-ஐ தாண்டி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. அதனால் மக்கள் ஆதங்கப்பட தேவை இல்லை. கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் கொரானா பரவல் கட்டுக்குள் வந்தது. அதனால் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது மற்றும் சானிடைசர் பயன்படுத்துவது போன்ற முன்எச்சரிக்கை
நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.
ஊரடங்கு திட்டம் இல்லை
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்திருந்தாலும் அது நம்மை விட்டு முழுமையாக விலகி செல்லவில்லை என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். பொதுமக்கள் வதந்திகளை நம்பாமல் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். உங்களின் உடல் ஆரோக்கியம் உங்கள் கைகளில் தான் உள்ளது. கர்நாடகத்தில் தற்போதைக்கு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை.
இவ்வாறு சுதாகர் கூறினார்.