கொரோனா பரவல் அதிகரிப்பு: கேரளாவில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடு அமல்

கேரளாவில் முழு ஊரடங்கு காரணமாக நேற்று சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.
கொரோனா பரவல் அதிகரிப்பு: கேரளாவில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடு அமல்
Published on

திருவனந்தபுரம்,

கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்து மிரட்டுகிறது. நேற்று முழு ஊரடங்கால் மாநிலம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடின. தொற்று பரவாமல் தடுக்க இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

கேரளாவில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வந்த நிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு அரசு கொரோனா கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகளை அறிவித்தது.

சுற்றுலா மையங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதோடு மால்கள் உள்பட அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. இதனால் கேரளாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு கிடுகிடுவென அதிகரித்தது. தற்போது தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்தபடி பொதுமக்களை மிரட்டுகிறது.

இந்தநிலையில் நேற்று கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் கேரள அரசு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை அமல்படுத்தியது. அதன்படி மாநிலம் முழுவதும் அரசு, தனியார் பஸ் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.

தனியார் டாக்சி, ஆட்டோ, வாடகை கார்கள் மற்றும் இரு சக்கர வாகன போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. அத்தியாவசிய மருந்து கடைகள், பால் விற்பனை நிலையங்கள் மட்டும் திறக்கப்பட்டு இருந்தன. அனைத்து மதுபான கடைகள், பார்கள், மளிகை கடைகள், வணிக மையங்கள் மூடப்பட்டதால் மக்கள் அதிகம் கூடும் மார்க்கெட்டுகள், பஜார்களும் வெறிச்சோடியது. ஒட்டுமொத்தமாக நேற்று மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கினர்.

இந்த நிலையில், மிகுந்த கட்டுப்பாடுகளுடன் கடுமையான ஊரடங்கு நகர்ப்புற வார்டுகளிலும், ஊராட்சிகளிலும் போடப்படும் என அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். குறிப்பாக கொரோனா வாராந்திர பாதிப்பு விகிதம் 7 சதவீதத்துக்கு அதிகமாக எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் இந்த ஊரடங்கு போடப்படும்.

இதுபற்றி மாநில அரசு தலைமைச்செயலாளர் டாக்டர் வி.பி.ஜாய் கூறுகையில், மாநிலத்தில் தொற்று பாதிப்பு அதிவேகமாக அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, அமலாக்க அதிகாரிகளால் கண்டிப்புடன் அமல்படுத்துவதற்கான கூடுதல் வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டு இருக்கிறது என தெரிவித்தார்.

வாராந்திர அடிப்படையில் மோசமான பகுதிகளை அடையாளம் கண்டு மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் அறிவித்து, இணையதளங்கள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக போதுமான விளம்பரம் செய்யும் நடைமுறை நேற்று அமலுக்கு வந்துள்ளது.

மாவட்ட கலெக்டர்கள், நுண் கட்டுப்பாட்டு மண்டலங்களை வழிகாட்டும் நெறிமுறைகள்படி அறிவித்து, ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்துவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (30-ந் தேதி) முதல் இரவு 10 மணியில் இருந்து காலை 6 மணி வரையில் ஆட்கள் நடமாட்டத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.

இருப்பினும் மருத்துவ அவசரங்களுக்கும், ஆஸ்பத்திரிகளில் உள்ள நோயாளிகளின் உதவியாளர்களுக்கும், அவசர சேவைகளுக்கான பொருட்களை, ஊழியர்களை ஏற்றிச்செல்கிற வாகனங்களுக்கும், குடும்ப உறுப்பினர் மரணத்தின்போதும், ரெயில், விமானம், கப்பல், தொலைதூர பொதுபோக்குவரத்து வாகனங்களில் ஏறுவதற்காக செல்லவும் விதிவிலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற எந்த அவசர தேவைக்கும் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் அனுமதி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com