கோடை வெயில் அதிகரிப்பு; பள்ளி நேரங்களை மாற்றி அமைக்கலாம் - மத்திய அரசு அறிவுறுத்தல்

பள்ளி வகுப்புகளை காலை 7 மணிக்கு தொடங்கி, மதியத்திற்குள் நடத்தி முடிக்கலாம் என மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
Image courtesy : PTI
Image courtesy : PTI
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் தற்போது கோடைக்காலம் நிலவி வரும் நிலையில், வெப்ப அலை காரணமாக பல்வேறு மாநிலங்களில் வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கிறது. குறிப்பாக வட மாநிலங்களான டெல்லி, ராஜஸ்தான், பீகார், ஒடிசா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கோடை வெயில் பொதுமக்களை வாட்டி எடுத்து வருகிறது.

இதனிடையே கோடைக்காலத்தில் சுகாதாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட துறைகளில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சமீபத்தில் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் கோடைக்காலத்தில் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி பள்ளிகளின் நேரத்தை மாற்றி அமைக்கலாம், அதாவது காலை 7 மணிக்கு வகுப்புகளை துவங்கி பகல் 12 மணியளவில் வகுப்புகளை நிறைவு செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே போல பள்ளி நேரங்களை குறைக்கலாம் எனவும், மாணவர்கள் நேரடியாக சூரிய ஒளிக்கு ஆட்படக்கூடிய விளையாட்டு உள்ளிட்ட நடவடிக்கைகளை முடிந்த அளவு பகல் நேரங்களில் தவிர்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காலை நேரங்களில் பள்ளிகளில் நடைபெறும் அசெம்ப்ளி அல்லது பிரார்த்தனைக் கூட்டத்தை மூடப்பட்ட அரங்கில் அல்லது வகுப்புகளுக்கு உள்ளேயே நடத்தலாம் என கூறப்பட்டுள்ளது.

இது தவிர மாணவர்களை ஏற்றிச் செல்லக்கூடிய பேருந்துகள் அல்லது வேன்களில் அதிக எண்ணிக்கையில் மாணவர்களை ஏற்றக்கூடாது எனவும், இருக்கை எண்ணிக்கை அளவுக்கு மட்டுமே மாணவர்களை ஏற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு நடந்தோ அல்லது சைக்கிள் மூலமாகவோ வரும் மாணவர்கள் தங்கள் தலையை மூடிக்கொள்ள அறிவுறுத்தப்பட வேண்டும் எனவும் வகுப்பறைகளில் மின்விசிறி மற்றும் நல்ல காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகளில் ஆங்காங்கே சுத்தமான குடிநீர் வைக்கப்பட வேண்டும் என்றும், அந்த குடிநீர் மண் பானைகளிலோ அல்லது வாட்டர் கூலர் மூலமாகவோ குளிர்ந்த நீராக கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சீருடைகளை பொறுத்தவரை மாணவர்கள் கழுத்தில் அணியும் டை உள்ளிட்டவற்றை அணிவதில் தளர்வுகள் வழங்கலாம் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை மத்திய கல்வி அமைச்சகம் வழங்கியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com