வாசகர்கள் பத்திரிகை படிக்கும் நேரம் அதிகரிப்பு - ஆய்வில் தகவல்

கொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள இந்த கால கட்டத்தில், வாசகர்கள் பத்திரிகை படிக்கும் நேரம் அதிகரித்து உள்ளது.
வாசகர்கள் பத்திரிகை படிக்கும் நேரம் அதிகரிப்பு - ஆய்வில் தகவல்
Published on

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால், அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்து பணிகளும் முடங்கி உள்ளன. இதனால் மக்கள் வீடுகளிலேயே இருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலை மக்களிடம் உள்ள வாசிப்பு பழக்கத்தில் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை அறிந்து கொள்வதற்காக, அவான்ஸ் பீல்டு அண்டு பிராண்டு சொலூசன்ஸ் என்ற ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கடந்த 13-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்களிடம் தொலைபேசி மூலம் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகளை அந்த நிறுவனம் வெளியிட்டு உள்ளது.

அதுபற்றிய விவரம் வருமாறு:-

கொரோனா நோய்க்கிருமி அச்சுறுத்தல் நிலவும் இந்த காலகட்டத்தில், மக்கள் பத்திரிகை படிக்கும் நேரம் அதிகரித்து உள்ளது. பத்திரிகைகளில் வரும் தகவல்களையே மக்கள் அதிகம் நம்புகின்றனர். பெரும் சவால்கள் நிறைந்த இந்த சூழ்நிலையில் பத்திரிகைகளுக்கும், வாசகர்களுக்கும் இடையேயான உறவு வலுவடைந்து உள்ளது. பத்திரிகைகள் தொடர்ந்து மிகவும் நம்பந்தகுந்த செய்திகளை அளித்து வருவதாகவும், எனவே அவை உண்மையிலேயே அத்தியாவசிய சேவையாக விளங்குவதாகவும் மக்கள் கருதுகிறார்கள்.

இதனால் மக்களிடையே பத்திரிகைகள் மீதான ஈர்ப்பு அதிகரித்து உள்ளது.

முன்பை விட வாசகர்கள் சராசரியாக இப்போது கூடுதலாக 22 நிமிடங்கள் பத்திரிகை வாசிக்கிறார்கள். அதாவது ஊரடங்கு அமல்படுத்தப்படுவதற்கு முன்பு வாசகர்கள் பத்திரிகை படிப்பதற்காக 38 நிமிடங்கள் செலவிட்டனர். இப்போது அவர்கள் 1 மணி நேரம் வாசிக்கிறார்கள்.

பத்திரிகை படிப்பவர்களில் 40 சதவீதம் பேர், 1 மணி நேரத்துக்கும் மேல் செய்திகளை படிப்பதாக தெரிவித்து உள்ளனர். முன்பு இது வெறும் 16 சதவீதமாக இருந்தது.

ஊரடங்குக்கு முன்னால் 42 சதவீதம் பேரே 30 நிமிடத்துக்கும் மேல் பத்திரிகை படித்தனர். இப்போது அது 72 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது.

15 நிமிடத்துக்கும் குறைவான நேரம் பத்திரிகை படித்தவர்களின் சதவீதம் முன்பு 14 ஆக இருந்தது. அது இப்போது 3 சதவீதமாக குறைந்துவிட்டது. அதாவது வாசகர்கள் கூடுதல் நேரம் படிக்க தொடங்கி இருக்கிறார்கள்.

42 சதவீதம் பேர் ஒரே மூச்சாக பத்திரிகையை படித்து முடிப்பதற்கு பதிலாக பல முறை படிக்கிறார்கள். அதாவது அவ்வப்போது ஒவ்வொரு பகுதியாக அவர்கள் படிக்கிறார்கள். இவ்வாறு ஆய்வில் தெரியவந்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com