அதிகரித்து வரும் கொரோனா; தமிழக சுகாதார செயலாளருக்கு மத்திய அரசு கடிதம்

அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு தமிழகம் உள்பட தென்னிந்திய மாநில சுகாதார செயலாளருக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
அதிகரித்து வரும் கொரோனா; தமிழக சுகாதார செயலாளருக்கு மத்திய அரசு கடிதம்
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்து பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 4,041 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது நேற்று முன்தினம் 2 ஆயிரத்து 745 ஆகவும், நேற்று 3 ஆயிரத்து 712 ஆகவும் இருந்தது. இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 68 ஆயிரத்து 585 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புக்கு எதிரான கடும் நடவடிக்கையை எடுக்கும் பணியில் அரசு ஈடுபட்டு வருகிறது.

தமிழகத்தில் நேற்று ஒரு நாள் கொரோனா பாதிப்பு 145 ஆக இருந்தது. எனினும், இன்று 113 ஆக குறைந்துள்ளது. சென்னையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 58ல் இருந்து 81 ஆக அதிகரித்துள்ளது.

இதேபோன்று, கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 711ல் இருந்து 756 ஆக உயர்ந்துள்ளது. இதனை முன்னிட்டு தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், தெலுங்கானா செயலாளர் (சுகாதாரம்), மராட்டிய கூடுதல் முதன்மை செயலாளர் (சுகாதாரம்), கர்நாடகம், கேரளா மற்றும் தமிழக முதன்மை செயலாளர்களுக்கு (சுகாதாரம்) மத்திய சுகாதார மந்திரி ராஜேஷ் பூஷண் இன்று கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், மாநிலங்களில் கொரோனா பரவல் ஏதேனும் ஏற்படாமல் இருக்க கடுமையாக கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். ஒரு வேளை பரவல் ஏற்பட்டால் அவற்றை கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com