

சிட்னி,
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 2-வது ஒருநாள் ஆட்டம் சிட்னியில் நடைபெற்றது.
மைதானத்தில் இரு அணிகளும் எதிரும் புதிருமாக ஆடிக் கொண்டிருந்தாலும், பார்வையாளர் பகுதியில் வித்தியாசமான சம்பவம் அரங்கேறியது. ஆஸ்திரேலியாவுக்கு ஆதரவாக இருந்த ரசிகை ஒருவருக்கு, இந்திய ரசிகர் ஒருவர் காதலை சொல்ல முழந்தாளிட்டு, முழங்காலில் நின்றது போட்டியை விட சுவாரசியமாக இருந்தது.
இந்த ஆட்டத்தின்போது இந்திய ரசிகர் ஒருவர் ஆஸ்திரேலிய ரசிகை ஒருவரிடம் தனது காதலை திடீரென வெளிப்படுத்தினார். வியப்பளிக்கும் வகையில் தனது காதலை வெளிப்படுத்தினார் அந்த ரசிகர்.
இதில் உறைந்துபோன அந்த ரசிகை சில வினாடிகள் ஆச்சரியத்தில் மிதந்தார். இதன்பிறகு, அவரது காதலை ஏற்றுக்கொண்ட அந்த ரசிகை, அவரைக் கட்டியணைத்து தனது சம்மதத்தை வெளிப்படுத்தினார். இதைத் தொடர்ந்து, இருவரும் அன்பு முத்தத்தைப் பரிமாறிக்கொண்டனர்.
இதைக் கண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல் கைதட்டி ஊக்கமளித்தார்.
மைதானத்தில் இணைந்த காதல் ஜோடியை தொலைக்காட்சிகளில் கண்ட இந்திய ரசிகர்கள், இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இரண்டவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோற்றாலும், இந்திய ரசிகர் ஒருவர் காதலை சொல்வதில் வெற்றிப் பெற்றார்.