

டெல்லி,
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, ஈரான் - அமெரிக்கா இடையேயான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. ஹர்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்ததுடன் அவ்வழியாக சென்ற சரக்கு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.
இதையடுத்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து வளைகுடா நாடுகளில் அமெரிக்க படைத்தளங்கள் உள்ள நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால் ஈரான், அமெரிக்கா இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. இன்று 9வது நாளாக மோதல் நீடித்து வரும் நிலையில் இந்த போரில் ஈரானில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்க வீரர்கள் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை, ஈரானின் உள்கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதலை தொடங்கியுள்ளது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது
இந்நிலையில், இந்தியர்கள் ஈரானுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக ஈரானுக்கு செல்வதை தவிர்க்குமாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.