ஹேமந்த் சோரன் கைதைக் கண்டித்து 'இந்தியா' கூட்டணி எம்.பி.க்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.
ஹேமந்த் சோரன் கைதைக் கண்டித்து 'இந்தியா' கூட்டணி எம்.பி.க்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் நேற்று மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஆண்டின் முதல் கூட்டத்தொடரை முன்னிட்டு ஜனாதிபதி உரை நிகழ்த்தினார். ஜனாதிபதி உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு விவாதம் நடைபெற்றது.

இந்த நிலையில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீதான அமலாக்கத்துறை நடவடிக்கை குறித்து இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு எதிராக அவர்கள் குரல் எழுப்பினர். அதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதுகுறித்து சிவசேனா கட்சியின் எம்.பி. பிரியங்கா சதுர்வேதி கூறியதாவது, 'சம்பாய் சோரன் பதவிப் பிரமாணம் செய்ய ஏன் இவ்வளவு நேரம் ஆனது. கவர்னர் அலுவலகத்தை மத்திய அரசு எப்படி தவறாக பயன்படுத்தியது என்பதை இது காட்டுகிறது' இவ்வாறு அவர் கூறினார்.

"எதிர்க்கட்சி தலைவர்களை என்ன காரணத்துக்காக அமலாக்கதுறை சோதனை செய்து கைது செய்கிறது. இதுவரை அமலாக்கத்துறையால் எதையும் நிரூபிக்க முடியவில்லை. மத்திய அரசு தாங்கள் ஆட்சி செய்யாத மாநிலங்களில் உள்ள தலைவர்களை வேட்டையாட முயற்சிக்கிறது. இவை அனைத்தும் எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும்" என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.சவுகதா ராய் கூறினார்.

முன்னதாக, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான இன்று, பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் அரசின் உத்திகள் குறித்து விவாதிக்க உயர்மட்ட அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், உள்துறை மந்திரி அமித் ஷா, நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி, மத்திய மந்திரி அனுராக் சிங் தாக்கூர், மத்திய போக்குவரத்து மந்திரி நிதின் கட்கரி, மத்திய சட்ட மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com