

புதுடெல்லி,
உலகளவில் அமெரிக்காவை தொடர்ந்து, கொரோனாவின் மோசமான கோரப்பிடியில் சிக்கியுள்ள 2வது நாடு என்ற பெயரை இந்தியா பெற்றுள்ளது.
தடுப்பூசியை பொறுத்தமட்டில் இந்தியாவில் உள்நாட்டில் பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து உருவாக்கியுள்ள கோவேக்சின் தடுப்பூசி மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையில் உள்ளது. ஜைடஸ் கேடிலா நிறுவனத்தின் ஜைகோவ்டி தடுப்பூசி, இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனையில் இருக்கிறது.
இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் கூட்டாக உருவாக்கி உள்ள தடுப்பூசியை இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து வழங்க இந்திய சீரம் நிறுவனம் ஒப்பந்தம் போட்டுள்ளது. இதன் இரண்டாவது, மூன்றாவது கட்ட மருத்துவ பரிசோதனை நடந்து வருகிறது.
ரஷிய தடுப்பூசியான ஸ்புட்னிக்வி தடுப்பூசியை இந்தியாவின் டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரீஸ் நிறுவனம் வினியோகிக்க உள்ளது. இந்த தடுப்பூசியின் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட மருத்துவ பரிசோதனை நடக்கிறது.
இந்நிலையில் இந்தியாவில் அவசர கால பயன்பாட்டிற்காக கோவிஷீல்டு தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். மேலும் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தியாவில் மட்டுமே கொரோனாவுக்கு எதிரான 4 தடுப்பூசிகள் தயாராக உள்ளது என்றும் அவர் கூறினார்.
முன்னதாக அமெரிக்காவுக்கு பிறகு அதிக எண்ணிக்கையிலான நோய்த்தொற்றுகளைக் கொண்ட இந்தியா, அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்த முதல் கொரோனா தடுப்பூசி இதுவாகும்.