

திருவனந்தபுரம்,
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா நாட்டு ராணுவங்களுக்கு இடையேயான ‘ஆஸ்ட்ராஹிந்த்-2026’ (AUSTRAHIND 2026) கூட்டு ராணுவப் பயிற்சியின் 5-வது பதிப்பு, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பயிற்சி மையத்தில் இன்று (19.10.2026) விறுவிறுப்புடன் தொடங்கியது. வரும் நவம்பர் 1-ஆம் தேதி வரை இந்த பயிற்சி நீடிக்க உள்ளது.
இந்த கூட்டுப் பயிற்சியில் இந்திய ராணுவம் மற்றும் ஆஸ்திரேலிய ராணுவத்தைச் சேர்ந்த தலா 120 வீரர்கள் என மொத்தம் 240 வீரர்கள் களமிறங்கியுள்ளனர். இந்திய ராணுவத்தின் சார்பில் புகழ்பெற்ற ‘கார்வால் ரைபிள்ஸ்’ (Garhwal Rifles) படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்களும், பிற முக்கிய ராணுவ பிரிவுகள் மற்றும் சேவைகளைச் சேர்ந்த வீரர்களும் இதில் தங்களது போர்த்திறனை வெளிப்படுத்த உள்ளனர்.
துப்பாக்கி சண்டை மற்றும் நவீன போர் உத்திகளை பரிமாறிக்கொள்ளும் இந்த பயிற்சியின் போது, இரு நாட்டு வீரர்களும் வான்வழி மற்றும் கடல்வழி அம்சங்களை உள்ளடக்கிய கூட்டுத் திட்டமிடல், கள செயல்பாடுகள் மற்றும் தீவிர போர் சார்ந்த பயிற்சிகளில் கூட்டாக ஈடுபடவுள்ளனர்.
இரு நாடுகளிலும் மாறி மாறி நடத்தப்படும் இந்த கூட்டு ராணுவ பயிற்சியின் 4-வது பதிப்பு, கடந்த ஆண்டு (2025) அக்டோபர் 13 முதல் 26 வரை ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் உள்ள இர்வின் படைத்தளத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கேரளாவில் தொடங்கியுள்ள 5-வது பதிப்பு, இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.